ஸ்ரீமுஷ்ணம் அருகே நூலக கட்டிடத்தில் கல்வி பயிலும் மாணவர்கள்

By செய்திப்பிரிவு

கடலூர்: ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள ஸ்ரீபுத்தூர் ஊராட்சியில் கடந்த 1995-96-ம் கல்வி ஆண்டு அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு தொடங்கப்பட்டது. இந்தப் பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதால் மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளது. தற்போது இப்பள்ளியில் 11 பேர் மட்டும் படித்து வருகின்றனர். ஒரேயொரு தலைமையாசிரியர் மட்டுமே பாடம் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இந்த பள்ளிக் கட்டிடம் வலுவிழந்து பழுதடைந்துள்ளதால் கட்டிடத்தின் மேற்கூரையில் சிமென்ட் அடிக்கடி பெயர்ந்து கீழே விழுகின்றன. சுவர் உள்ளிட்ட பல இடங்களில் விரிசல் விட்டுள்ளது. இந்த பள்ளிக் கட்டிடத்தில் மாணவர்கள் கல்வி பயில கூடாது என ஒன்றிய பொறியாளர் தெரிவித்ததால் அதேபகுதியில் உள்ள நூலக கட்டிடத்தில் கடந்த ஓராண்டாக பள்ளி தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.

இந்த வலுவிழந்த பள்ளியை மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பார்வையிட்டு சென்றதோடு சரி, மேற்கொண்டு எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. பள்ளி மாணவர்களுக்காக வேறு இடத்தில் இருந்து மதிய உணவு கொண்டு வரப்படுகிறது. இந்த நூலக கட்டிடத்தில் மாணவர்களுக்கு தேவையான கழிப்பறை வசதி, குடிநீர் வசதி கூட இல்லை.

தற்போது தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட காலை உணவுக்கான பொருட்களும் வந்துள்ளன. அரசு இடைநின்ற மாணவர்களை அடையாளம் கண்டு கல்வி கற்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும் கிராமப்புற மாணவர்களின் மேம்பாட்டுக்காக பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

ஆனால் மாவட்டத்தின் கடை கோடியில் உள்ள ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கும் இந்த ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித் தராமல் இருப்பது வேதனையை அளிக்கிறது என்கின்றனர் சமூக ஆவலர்கள். பழுதடைந்த பள்ளிக் கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய பள்ளிக் கட்டிடம் கட்டித்தர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெற்றோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE