எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்கியது

By செய்திப்பிரிவு

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியது. சிறப்பு பிரிவு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இட
ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நாளை நேரடியாக நடைபெறுகிறது.

தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 2023-24-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு சுகாதாரத் துறையின் www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் ஆன்லைனில் நேற்று தொடங்கியது. அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு, அந்தந்த தரவரிசை பட்டியலில் இடம்பெற்றவர்கள் கலந்தாய்வில் பங்கேற்று வருகின்றனர்.

வரும் 31-ம் தேதி மாலை 5 மணி வரை பதிவு செய்து, கட்டணம் செலுத்தி, இடங்களை தேர்வு செய்யலாம். ஆக.1, 2-ம் தேதிகளில் தரவரிசை பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். ஆக.3-ம் தேதி இடம் ஒதுக்கப்பட்ட விவரங்கள் இணையதளங்களில் வெளியிடப்படும். ஆக.4-ம் தேதி முதல் 8-ம் தேதி மாலை 5 மணி வரை
ஒதுக்கீட்டு ஆணையை இணையதளங்களில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஆக.8-ம் தேதி மாலை 5 மணிக்குள் ஒதுக்கீடு பெற்ற கல்லூரியில் சேர வேண்டும். ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்பது தொடர்பான வழிகாட்டுதல் வீடியோ, மேற்கண்ட இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத
உள் இடஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நாளை (ஜூலை 27) சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேரடியாக நடக்க உள்ளது. இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு சுகாதாரத் துறை இணையதளங்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

முதுநிலை படிப்புகளுக்கு..: இதற்கிடையே, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு வரும் 27-ம் தேதி தொடங்குகிறது. இதில் 100 சதவீத இடங்கள் மற்றும் இறுதி சிறப்பு கலந்தாய்வை மத்திய கலந்தாய்வுக் குழுவே (எம்சிசி) நடத்தும். எந்த கல்வி நிறுவனமும் நேரடியாக கலந்தாய்வு நடத்தக்கூடாது என்று தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) முதுநிலை மருத்துவக் கல்வி வாரிய துணைச் செயலர் அஜேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE