இந்து தமிழ் திசை செய்தி எதிரொலி | திருவண்ணாமலை ரேணுகாபுரம் தொடக்க பள்ளி கட்டிடம் திறப்பு

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: ‘இந்து தமிழ் திசை' செய்தியின் எதிரொலியாக கண்ணமங்கலம் அடுத்த ரேணுகாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சீரமைக்கப்பட்ட கட்டிடம் நேற்று திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்றன.

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே காள சமுத்திரம் அடுத்த ரேணுகாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உட் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.5.24 லட்சம் மதிப்பில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்கப்பட்டு ஒன்றரை மாதங்களாகியும், சீரமைப்பு பணி முடிவு பெறவில்லை.

இதனால், பள்ளி அருகே உள்ள மாரியம்மன் கோயிலில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டன.இது குறித்து 'இந்து தமிழ் திசை' யில் புகைப் படத்துடன் நேற்று செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, ரேணுகாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் புதிய கட்டிடம் நேற்று திறக்கப்பட்டன.

பள்ளி வகுப்பறையில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்றுள்ளன. இதனால், ஆசிரியர்கள், மாணவர்களும், பெற்றோர்களும், கிராம மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், அவர்கள் பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்த பள்ளி கல்வித் துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் மற்றும் ‘இந்து தமிழ் திசை' நாளிதழுக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE