புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது: பள்ளிகளுக்கு கல்வித் துறை உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: மத்திய அரசின் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்கு அரசுப் பள்ளிகள் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை விவரம்: நடப்பு கல்வியாண்டில் புத்தாக்க அறிவியல் மானக் விருதுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான பதிவுகளை இணையதளத்தில் மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் இயக்குநர் கடிதம் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால், இதுவரை எவ்வித விண்ணப்பங்களும் பதிவு செய்யப்படாதது வருத்தமான செயலாகும்.

எனவே அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் வகுப்புக்கு ஒருவர் வீதம் 5 பேர், நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் வகுப்புக்கு ஒருவர் வீதம் 3 பேர் என்ற விகிதத்தில் தயார்செய்து http://www.inspireawards.dstgov.in/ என்ற இணையதளம் வாயிலாக ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். இதில் எந்தவொரு பள்ளியும் விடுபடக் கூடாது.

எனவே, அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் இந்த விருதுக்காகத் தேர்வான மாணவர்கள் மற்றும் பொறுப்பு ஆசிரியர் விவரங்களை இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இது சார்ந்து தலைமை ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE