சிபிஎஸ்இ பள்ளிகளில் தமிழ்வழி கல்வி: மாநில மொழிகளில் பாடநூல் தயாரிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தேசிய கல்விக் கொள்கையின்படி, சிபிஎஸ்இ பள்ளிகளில் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பாடங்களை நடத்த மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் இயங்கும் பள்ளிகளில், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இந்நிலையில், பள்ளிக் கல்வியை உள்ளூர் மொழிகளில் வழங்க வேண்டும். இதற்காக உள்ளூர் மொழிகளில் பாடநூல்களை மொழிபெயர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதை செயல்படுத்தும் வகையில் 22 மொழிகளில் பாடப் புத்தகங்களைத் தயாரிப்பதற்கான பணிகளில் சிபிஎஸ்இ ஈடுபட்டுள்ளது. மாணவர்களுக்கு பன்மொழி அறிவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிபிஎஸ்இ (கல்விப் பிரிவு) இயக்குநர் ஜோசப் இம்மானுவேல், அங்கீகாரம் பெற்ற பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்திய கல்வி அமைச்சகம், இந்திய மொழிகளின் வாயிலாக கல்வி வழங்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது மிகவும் முக்கியமான முன்னெடுப்பை கையில் எடுத்துள்ளது.

அதன்படி, 22 இந்திய மொழிகளில் புதிய பாடநூல்களைத் தயாரிக்க தேசிய கல்வியியல் ஆய்வு மற்றும் பயிற்சி மையத்துக்கு (என்சிஇஆர்டி), மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியது. அதற்கான பணியில் என்சிஇஆர்டி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அடுத்த கல்வியாண்டில் இருந்து 22 இந்திய மொழிகளில் பாடப் புத்தகங்கள் மாணவர்களுக்கு கிடைக்கும்.

ஏற்கெனவே பொறியியல், மருத்துவம், தொழில் திறன், சட்டம் போன்ற உயர் படிப்புகளுக்கு, மாநில மொழிகளில் பாடப் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. பயிற்று மொழி அணுகுமுறை, பள்ளிக்கல்வி முதல் உயர்கல்வி வரை ஒரே வடிவில் இருக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, சிபிஎஸ்இ பள்ளிகள், அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் உள்ள இந்திய மொழிகளைப் பயிற்று மொழியாகப் பயன்படுத்துவதைக் கருத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம், சிபிஎஸ்இ பள்ளிகளில் தமிழ் வழியில் பாடங்கள் பயிற்றுவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது ட்விட்டர் பக்கத்தில், "பள்ளிகளில் தாய்மொழி மற்றும் இந்திய மொழிகளில் கல்வியை ஊக்குவிக்கும் முயற்சியானது, பாராட்டுக்குரிய நடவடிக்கையாகும்' என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE