சென்னை ஐஐடி 60-வது பட்டமளிப்பு விழா: மாணவர்களிடம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முன்வைத்த 2 கேள்விகள்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக வளாகத்தில் இன்று நடைபெற்ற 60-வது பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 2,573 மாணவ-மாணவிகள் பட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.

சென்னை ஐஐடி-யின் 60வது பட்டமளிப்பு விழா ஐஐடி வளாகத்தில் நடைபெற்றது. சர்வதேச வளாகத்தை தொடங்கிய முதல் ஐஐடி என்ற வரலாற்றுச் சிறப்புடன், தான்சானியா நாட்டின் சான்சிபாரில் தனது வளாகத்தை சென்னை ஐஐடி நிறுவியுள்ள நிலையில் இந்தப் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தனஞ்சய ஒய்.சந்திரசூட் இந்த விழாவுக்கு தலைமை விருந்தினராக வருகை தந்தார். சென்னை ஐஐடி நிர்வாகக் குழு தலைவர் டாக்டர் பவன் கோயங்கா தலைமையில், சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

இந்த பட்டமளிப்பு விழாவில் 675 பேருக்கு பி.டெக் (36 பேர் ஹானர்ஸ்), 407 பேருக்கு பிடெக் மற்றும் எம்டெக் இரட்டைப் பட்டங்கள், 442 பேருக்கு எம்.டெக், 147 பேருக்கு எம்.எஸ்சி, 46 பேருக்கு எம்.ஏ., 49 பேருக்கு எக்சிகியூடிவ் எம்.பி.ஏ., 67 பேருக்கு எம்.பி.ஏ., 200 பேருக்கு எம்.எஸ்., 453 பேருக்கு பி.எச்.டி, 70 பேருக்கு தொழில்துறையினருக்கான ஆன்லைன் எம்.டெக்., என 2,573 பட்டதாரிகளுக்கு சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி பட்டங்களை வழங்கினார். மேற்குறிப்பிட்ட பிஎச்டி பட்டங்களில் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களின் 19 இணைப் பட்டங்களும் அடங்கும். மொத்தம் 2,573 மாணவ - மாணவிகளுக்கு பட்டம் வழங்கும் இந்நிகழ்வில், 2,746 பட்டங்கள் (இணை மற்றும் இரட்டைப் பட்டங்கள் உள்பட) வழங்கப்பட்டன.

பட்டம் பெற்ற மாணவர்கள் மற்றும் பரிசு வென்றவர்களை வாழ்த்தி பேசிய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “கடந்த 64 ஆண்டுகளில், இந்தப் பல்கலைக்கழகம், அதன் ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளது. உண்மையில், சென்னை ஐஐடி போன்ற நிறுவனங்கள் விஞ்ஞானத்தை நிலைநிறுத்துவதன் மூலம் இந்திய சமூகத்தை மாற்றியுள்ளன.

பட்டம் பெறும் அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துகள். நீங்கள் இந்த நிறுவனத்தை விட்டு வெளியேறினாலும், அதன் ஒரு பகுதி எப்போதும் உங்களுடன் இருக்கும். அதன் மதிப்புகள் மற்றும் கொள்கைகள் உங்களை வழிநடத்தும்; ஊக்குவிக்கும். சட்டத்தை கடைபிடிக்க முடியாத வேகத்தில் தொழில்நுட்பம் உருவாகிறது என்று அடிக்கடி கூறப்படுகிறது. இந்த நேரத்தில் இது உண்மையாகத் தோன்றலாம். ஆனால், நாம் ஒரு படி மேலே சென்றால், சட்டம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள் இயங்கியல் உறவைப் பகிர்ந்து கொள்கின்றன என்பதற்கு நமது வரலாறு ஒரு சான்றாகும்.

இன்று, நான் உங்களிடம் இரண்டு கேள்விகளை விட்டுச் செல்ல விரும்புகிறேன், அதை உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். எத்தகைய மதிப்பீடுகளை உங்கள் தொழில்நுட்பம் பிரதிபலிக்கிறது? எத்தகைய மதிப்பீடுகளை அது மேம்படுத்துகிறது?" என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, “தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனம் என்ற வகையில், அனைவருக்கும் ஐஐடிஎம் என்ற திட்டத்தை செயல்படுத்துவதற்கு அதிக கவனம் செலுத்துகிறோம். கிராமப்புற இந்தியாவைச் சென்றடைவதில் கவனம் செலுத்தும் பல முன்முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.

கல்வி சக்தி மற்றும் வித்யா சக்தி ஆகியவை தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசத்தில் 5 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் 12,000 பள்ளி மாணவர்களை சென்றடைகின்றன. அறிவியல், கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகியவை தமிழ் மற்றும் இந்தி மொழியில் நேரடி ஆன்லைன் வகுப்புகள் மூலம் கற்பிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் 89 கிராமங்களிலும் உத்தரபிரதேசத்தில் 100 கிராமங்களிலும் கிராமப்புற தொடர்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

7 hours ago

கல்வி

8 hours ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

7 days ago

கல்வி

8 days ago

கல்வி

9 days ago

கல்வி

11 days ago

கல்வி

12 days ago

கல்வி

12 days ago

மேலும்