சேத்தியாத்தோப்பில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி கட்ட நிதி ஒதுக்கீடு செய்தும் பணிகள் தொடங்கப்படாதது ஏன்?

By செய்திப்பிரிவு

கடலூர்: சேத்தியாத்தோப்பில் 4 மாதங்களுக்கு முன்பு இடிக்கப்பட்ட அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதிக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்தும் கட்டுமானப் பணி தொடங்கப்படாமல் உள்ளது.

சேத்தியாத்தோப்பில் அரசு ஆதிதிராவிடர் மாணவர்கள் நல விடுதி கடந்த 30 ஆண்டுகளாக இயங்கி வந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விடுதி கட்டிடம் வலுவிழந்து சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுந்தது. இதையடுத்து அதிகாரிகள், விடுதியை உடனே இடிக்க வேண்டும் என்று கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே உத்தரவிட்டனர்.

ஆனால் வலுவிழந்த கட்டிடத்தை இடிக்க தாமதம் ஏற்பட்டு, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தான் கட்டிடத்தை இடித்து அகற்றினர். அதே இடத்தில் புதிய விடுதி கட்டுவதற்காக தாட்கோ நிதி ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கட்டிட கட்டுமானப் பணிகளை ஆரம்பிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக தனியார் இடத்தில் வாடகைக்கு எடுத்து விடுதி நடத்தப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்கள் மதிய உணவு சாப்பிட வெகு தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மதிய உணவு இடைவேளை அரைமணி நேரம் என்பதால் வெகு தூரம் சென்று உணவு சாப்பிட்டு வருவதற்குள் வகுப்புகள் தொடங்கி விடுகிறது என்கின்றனர் மாணவர்கள்.

மாணவர்கள் பள்ளி வகுப்பறைக்கு மீண்டும் செல்ல வேண்டும் என்ற கட்டாயத்தினால் அவசர, அவசரமாக செல்வதால் மினி டெம்போ உள்ளிட்ட வாகனங்களின் பின்புறம் ஏறிக்கொண்டு ஆபத்தான பயணம் செய்கின்றனர். கட்டிடத்தை இடித்து 3 மாதங்களுக்கு மேலாகியும் புதிய விடுதி கட்டுவதற்கு ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை.

பூமி பூஜை கூட போடாமல் விட்டுள்ளனர் என்று பெற்றோர் தரப்பில் தெரிவித்தனர். மாவட்ட நிர்வாகமும், ஆதிதிராவிடர் நலத்துறை உயரதிகாரிகளும் நேரடியாக கள ஆய்வு செய்து மாணவர்களின் நலன் கருதி புதிய விடுதி கட்டுமானப் பணியை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மாணவர்கள் மற்றும் பெற்றோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE