ஆங்கிலம், அறிவியல், கணித பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாத அரசுப் பள்ளி - எட்டயபுரம் அருகே அவலம்

By செய்திப்பிரிவு

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே மேலநம்பிபுரத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் ஆங்கிலம், அறிவியல், கணித பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாததால் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எட்டயபுரம் அருகே மேலநம்பிபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு 56 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். தலைமை ஆசிரியை மற்றும் 3 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இரு ஆசிரியர்கள் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கின்றனர். 6 முதல் 8-ம் வகுப்பு வரை தலைமை ஆசிரியர் தமிழ் பாடமும், மற்றொரு ஆசிரியர் வரலாறு பாடமும் எடுக்கின்றனர்.

ஆனால், அறிவியல், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை. இதனால், தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது, 2 ஆசிரியர்களும் மற்ற பாடங்களை கற்பித்து வந்தனர்.

பணிச்சுமை காரணமாக அருகே உள்ள சிங்கிலிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் இருந்து அறிவியல், கணிதம், ஆங்கிலம் பாடங்களுக்கு மூன்று ஆசிரியர்களை வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் மேலநம்பிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாற்றுப் பணிக்கு வர வேண்டும் என கடந்த ஆண்டு வட்டாரக் கல்வி அலுவலர் உத்தர விட்டிருந்தார்.

ஆனால், அவர்கள் சரிவர பள்ளிக்கு வரவில்லை. இதற்கிடையே, தலைமை ஆசிரியை ஒரு மாத மருத்துவ விடுப்பில் செல்ல, ஒரு ஆசிரியர் மட்டும் 6 முதல் 8-ம் வகுப்பு வரை கற்பித்து வந்தார். ஒரு நாளைக்கு 8 பாட வேளைகள் உள்ள நிலையில் அவர் தினமும் 15 பாடங்களை எடுத்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 10-ம் தேதி தலைமை ஆசிரியை பணியில் இணைந்தார். இந்நிலையில், மாற்றுப் பணிக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் வராததை அறிந்த பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர். தங்களது குழந்தைகளின் மாற்றுச் சான்றிதழை வழங்க வேண்டும் என கோரினர்.

தகவல் அறிந்து, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் (பொறுப்பு) சுப்புராஜ்,வட்டாரக் கல்வி அலுவலர் ராம சுப்பிரமணியன் ஆகியோர் பள்ளிக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மாற்றுப்பணிக்கு ஆசிரியர்கள் வர உடனடியாக உத்தரவு வழங்கப்படும். கணிதம், அறிவியல், ஆங்கிலம் பாடங்களின் ஆசிரியர்கள் வாரத்தில் ஒரு நாள் இங்கு பாடம் நடத்துவார்கள் என உறுதி அளித்தனர்.

இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட் டனர். ஆசிரியர் காலிப் பணியிடங்களை அரசு நிரப்பி மாணவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE