புதுச்சேரியில் அரசு தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல்

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்துக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இதுகுறித்து துணைநிலை ஆளுநர் அலுவலகச் செய்திக்குறிப்பு விவரம்: ''புதுச்சேரி அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யும் வகையிலும், அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என பேரவை கூட்ட நிதிநிலை அறிக்கையில் முதல்வர் ரங்கசாமி தெரிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்திற்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.

புதுச்சேரி பகுதியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பயிலும் 638 மாணவர்களுக்கு அக்ஷய பாத்திரம் பவுண்டேஷன் மூலமாகவும், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 460 மாணவர்கள், மாகி பகுதியைச் சேர்ந்த 77 மாணவர்கள் மற்றும் ஏனாம் பகுதியைச் சேர்ந்த 99 மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறையின் மத்திய சமையல் கூடங்களில் இருந்தும் மதிய உணவு வழங்கப்படும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் 1274 மாணவர்கள் பயன்பெறுவர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE