புதுச்சேரி: புதுச்சேரி உயர்கல்வி நிறுவனங்கள் தரவரிசையில் சரிவில் உள்ளன. குறிப்பாக புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம், தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகியவை தரவரிசை பட்டியலில் கடுமையாக சரிந்துள்ளன. இவ்விஷயத்தில் ஆளுநர், முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
புதுச்சேரி அரசு 1960-ம் ஆண்டிலிருந்து புதுவையில் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. ஜிப்மர் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மத்திய பல்கலைக்கழகம், பொறியியல் கல்லூரிகள், கலைக் கல்லூரிகள் என உயர்கல்வியில் புதுச்சேரிக்கென்று சிறப்பிடம் உண்டு.
உயர் கல்வியின் தரம், மேம்பாடு ஆகியவை நாட்டின் வளர்ச்சியை தீர்மானிக்கும் என்பதால் கடந்த 8 ஆண்டுகளாக மத்திய கல்வித்துறை அமைச்சகம் புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் உள்ள 11 வகையான உயர்கல்வி நிறுவனங்களை மதிப்பீடு செய்து அதன் முடிவுகளை வெளியிடுகிறது.
இந்த மதிப்பீடு ஒவ்வொரு நிறுவனத்திலும் உள்ள கற்பித்தல், கற்றல் பற்றிய முறைகள் மற்றும் வளங்கள், ஆராய்ச்சி, பட்டதாரிகளின் தேர்வின் சதவீதம், சமுதாய சேவை, அனைவரையும் உள்ளடக்கிய கல்வி முறை, ஆகியவற்றின் புள்ளி விவரங்களின் அடிப்படையில் பகுத்தாய்வு செய்யப்பட்டு கொடுக்கப்பட்டுள்ள முடிவாகும். அதன் அடிப்படையில் இந்த ஆண்டிற்கான முடிவை தற்போது வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சரிவு: இதில், புதுச்சேரியில் ஜிப்மரைத் தவிர்த்து இதர உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை மோசமான நிலையில் உள்ளது. குறிப்பாக புதுச்சேரி அரசினால் இயக்கப்படும் உயர்கல்வி நிறுவனங்கள், தரவரிசையில் மிக மோசமான நிலையில் உள்ளதைக் காட்டுகிறது.
புதுச்சேரியின் முதல் பல்கலைக் கழகமான தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி, இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி, வேளாண் கல்லூரி, தாகூர் கலைக்கல்லூரி, பாரதிதாசன் மகளிர் கல்லூரி போன்ற எந்தக் கல்லூரியும் முதல் 100 நிறுவனங்களின் வரிசையில் ஒரு இடத்தையும் பெறவில்லை.
புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகமும் அனைத்து நிறுவனங்களின் வரிசையிலோ பல்கலைக்கழகங்களின் வரிசையிலோ முதல் 100 இடங்களில் ஒரு இடத்தையும் பிடிக்கவில்லை. பல்கலைக்கழக வரிசையில் 141 வது இடத்தை பிடித்து பல தனியார் மற்றும் மாநில பல்கலைக் கழகங்களுக்கு பின்னால் உள்ளது.
இதில் இன்னும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய விஷயம் என்னவெனில் புதுவைப் பல்கலைக்கழகத்தின் மதிப்பு வரிசை எண் ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருவதுதான். 2016-ம் ஆண்டில் 13 ஆக இருந்த தரவரிசை எண், 2021-ல் 58 ஆகவும் 2022-ல் 68 ஆகவும் 2023-ல்141 ஆகவும் குறைந்துள்ளது. சிறப்பான நிதியும் மனித வளமும் பெற்றுள்ள இப்பல்கலைக் கழகம் முதல் 10 அல்லது 20 இடங்களைப் பிடிக்க வேண்டிய நிலையில், 141 வது படிவரிசையை பெற்றுள்ளது.
தொழில்நுட்பக் கல்லூரிகளின் வரிசையில் காரைக்காலில் உள்ள தொழில்நுட்ப நிறுவனம் 128 -வது இடத்தைப் பிடித்துள்ளது. புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக் கழகமாக மாறியுள்ள புதுச்சேரி தொழில்நுட்பக் கல்லூரி 184 வது இடத்தை பிடித்துள்ளது. புதுச்சேரி தொழில்நுட்பக் கல்லூரியின் தர வரிசை 2011-ல் 144 வது இடத்தில் இருந்து, 2022-ல் 150ஆவதாகவும் இந்த ஆண்டு 184 ஆகவும் குறைந்துள்ளது. பல்கலைக்கழகமான பிறகு அதன் படி வரிசை மிக அதிகமாக குறைந்துள்ளது.
சுய பரிசோதனை அவசியம்: இது பற்றி முன்னாள் எம்பியும் பேராசிரியருமான ராமதாஸ் கூறுகையில், " புதுச்சேரி ஒரு கல்விக் கேந்திரம் என்றும் இங்கே தரமான கல்வி அளிக்கப்படுகிறது என்றும் முதல்வர் கூறுவதும் புதுவையின் கல்வித்துறையில் புரட்சிகரமான மாற்றங்கள் வந்து கொண்டிருக்கின்றன என்று துணை நிலை ஆளுநர் கூறுவதும், உண்மையல்ல என்பதை மத்திய அரசின் மதிப்பீட்டு புள்ளி விவரங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
புதுவையில் இயங்கும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமான ஜிப்மர் மட்டுமே புதுச்சேரிக்கு பெருமை சேர்த்துள்ளது. இந்தியாவில் உள்ள முதல் 100 கல்வி நிறுவனங்களில் அது 39-வது இடத்தைப் பெற்றுள்ளது. இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் ஜிப்மர் 72.10 மதிப்பெண்கள் பெற்று ஐந்தாவது இடத்திலும், மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி 50.86 மதிப்பெண்கள் பெற்று 47வது இடத்தையும் பெற்றுள்ளது.
அதேபோல் நல்ல நிதியும் மனித வளமும் பெற்றுள்ள மத்திய பல்கலைக் கழகம் முதல் 10 அல்லது 20 இடங்களை பிடிக்க வேண்டிய நிலையில், 141 வது படிவரிசையை பெற்றுள்ளது பற்றி பல்கலைக்கழக நிர்வாகமும் பேராசிரியர்களும் சுய பரிசோதனை செய்ய வேண்டும்.
ஆட்சி மன்றம் எங்கே? - புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தரவரிசை குறைவுக்கு மிக முக்கிய காரணம் அந்த பல்கலைக்கழகத்தின் அடிப்படை அமைப்பான ஆட்சி மன்றத்தை துணைநிலை ஆளுநர் உருவாக்காததுதான். ஆட்சி மன்றம் இல்லாமல் கல்வியைப் பற்றிய எந்த முடிவையும் யாரும் பல்கலைக்கழகத்தில் எடுக்க முடியாது.
இந்தியாவில் எந்த பல்கலைக்கழகமாவது ஆரம்பித்த மூன்று ஆண்டுகளுக்கு ஆட்சி மன்றம் இல்லாமல் செயல்பட்டு இருக்கிறதா என்பதை துணைநிலை ஆளுநர் கண்டுபிடித்து புதுவை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
காஞ்சி மாமுனிவர் மேற்படிப்பு பட்ட மையமும், மாஹேவில் உள்ள மகாத்மா காந்தி கல்லூரியும், முறையே ஐம்பதாவது இடத்தையும் 126 வது இடத்தையும் பெற்று ஏதோ திருப்தியை கொடுத்திருக்கின்றன. வேறு எந்தக் கல்லூரியும் முதல் 200 கல்லூரிகளின் பட்டியலில் ஓரிடத்தைக் கூட பெறவில்லை.
ஒட்டு மொத்தமாக, புதுச்சேரி அரசின் கீழ் உள்ள உயர் கல்வித்துறை சீராகாமல் சீரழிந்து வருகிறது என்பதை அரசு உணர வேண்டும். பல ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து சமுதாயத்துக்கு உரிய எந்த பலனும் இத்துறையால் ஏற்படவில்லை" என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
7 days ago
கல்வி
8 days ago
கல்வி
8 days ago
கல்வி
9 days ago
கல்வி
9 days ago