சிவகங்கை: நாட்டரசன்கோட்டை அருகே தகுதி இருந்தும் பல ஆண்டுகளாக பள்ளிக்காக திருவேலங்குடி கிராம குழந்தைகள் ஏங்கி வருகின்றனர். இந்த ஆண்டாவது பள்ளி கல்வித் துறை கருணை காட்ட வேண்டுமென கோரிக்கை எழுந்தது.
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை அருகே கவுரிப்பட்டி ஊராட்சியில் அருகருகே உள்ள திருவேலங்குடி, காரம்பட்டி கிராமங்களில் 400 குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 50 குழந்தைகள் இருந்தும் பள்ளிக்கூடம் இல்லை. இதனால் குழந்தைகள் 5 கி.மீ. தூரத்தில் உள்ள காளையார்மங்கலம், 4 கி.மீ. தூரத்தில் உள்ள நாட்டரசன் கோட்டைக்குச் சென்று படித்து வருகின்றனர்.
போக்குவரத்து வசதி இல்லாததால் தினமும் நடந்தும், சரக்கு வாகனங்களிலும் பள்ளிக்குச் சென்று வருகின்றனர். அரசு விதிமுறைப்படி 25 மாணவர்கள் இருந்தாலே தொடக்கப் பள்ளி தொடங்கலாம். ஆனால், இங்கு 50 மாணவர்கள் இருந்தும் பள்ளி திறக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
திருவேலங்குடியில் தொடக்கப் பள்ளி தொடங்கக் கோரி சிவகங்கை ஆட்சியரிடம் 2010-ம் ஆண்டு கிராம மக்கள் மனு அளித்தனர். அதன் பின்பு பலமுறை மனு அளித்துள்ளனர். தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கிராம மக்கள் ஊரை விட்டு வெளியேறி கோயிலில் தஞ்சமடைந்து போராட்டம் நடத்தினர்.
ஆனால், கிராமத்தில் அரசு நிலம் இல்லை, தொகுதி எம்எல்ஏ பரிந்துரைக் கடிதம் தரவில்லை உள்ளிட்ட காரணங்களைக் கூறி அதிகாரிகள் பள்ளி தொடங்காமல் இருந்தனர். இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து 2021-ம் ஆண்டு சிவகங்கை தொகுதி எம்எல்ஏ செந்தில்நாதன் பள்ளி தொடங்க பரிந்துரைக் கடிதம் அளித்தார்.
மேலும் தனியார் சார்பில் 60 சென்ட் இடம் ஒதுக்கப்பட்டு கல்வித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டே பள்ளி தொடங்கப்படும் என அப்போதைய மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி தெரிவித்தார். ஆனால் அதன் பின்பும் பள்ளி தொடங்காததால் அப்பகுதி குழந்தைகள் ஏமாற்றமடைந்தனர்.
இது குறித்து திருவேலங்குடியைச் சேர்ந்த ஊராட்சித் துணைத் தலைவர் ஏ.முத்துலெட்சுமி கூறியதாவது: பள்ளி தொடங்கக் கோரி 12 ஆண்டுகளாக போராடி வருகிறோம். கடந்த ஆண்டே எங்கள் கிராமத்தில் உள்ள மகளிர் மைய கட்டிடத்தில் பள்ளி தொடங்கப்படும் என்று கூறினர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இந்த ஆண்டாவது பள்ளி தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
இது குறித்து கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘வரும் ஜூலையில் புதிய பள்ளிகளை தொடங்குவதற்கான அறிவிப்பு வெளியாகும். இந்த முறை கட்டாயம் திருவேலங்குடி பள்ளிக்கு அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்’ என்று கூறினர்.
முக்கிய செய்திகள்
கல்வி
10 hours ago
கல்வி
14 hours ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago
கல்வி
8 days ago