பரிசலில் பள்ளி செல்லும் சிறுவர்கள் - சின்னாறு குறுக்கே 30% பணியுடன் நின்ற பாலம் கட்டும் பணி மீண்டும் தொடங்குமா?

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: சூளகிரி அருகே சின்னாற்றின் குறுக்கே 30 சதவீதம் பணியுடன் நின்ற பாலம் கட்டும் பணியை மீண்டும் தொடங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள போகிபுரம் கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் தங்களின் அன்றாட தேவைக்கு 5 கிமீ தூரம் உள்ள சூளகிரிக்கு வந்து செல்ல வேண்டும். இதேபோல, பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பணிக்குச் செல்வோரும் சூளகிரிக்கு வந்து பிற பகுதிக்குச் செல்ல வேண்டும்.

இக்கிராமத்திலிருந்து சூளகிரிக்கு செல்லும் வழியில் குறுக்கே சின்னாறு செல்கிறது. இந்த ஆற்றை கடந்தே சூளகிரிக்கு செல்ல வேண்டும். இந்நிலையில், கடந்த 1986-ம் ஆண்டு ஆற்றின் குறுக்கே சின்னாறு அணை கட்டப்பட்டது. அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடும் போது, கிராம மக்கள் ஆற்றைப் பரிசல் மூலம் கடந்து சென்று வருகின்றனர்.

ஒரு பரிசல் மட்டுமே அங்கு இயக்கப்படுவதால், ஆற்றின் குறுக்கே கயிறைக் கட்டி, கயிறை பிடித்தபடி ஆற்றில் இறங்கி கடந்து வருகின்றனர். இந்த சிரமங்களைத் தீர்க்க ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக கிராம மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி தொடங்கியது.

பின்னர் தொடர் மழை மற்றும் சின்னாறு அணையில் நீர்இருப்பு அதிகரித்ததால் பாலம் கட்டும் பணி நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் இதுவரை பாலம் கட்டும் பணியை தொடங்கவில்லை.

இது தொடர்பாக கிராம மக்கள் கூறியதாவது: எங்கள் கிராமத்தில் இருந்து சூளகிரிக்கு சின்னாறு ஆற்றில் 500 மீட்டர் கடந்து செல்ல வேண்டும். 15 அடி ஆழமுள்ள ஆற்றில் ஆபத்தான முறையில் சென்று வருகிறோம். மாற்று வழியில் வனப்பகுதி ஒத்தையடிப் பாதையில் 10 கிமீ தூரம் சுற்றிச் செல்ல வேண்டும்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கி, 30 சதவீதம் முடிந்த நிலையில் நிறுத்தப்பட்டது. இதனால், தொடர்ந்து நாங்கள் ஆற்றைக் கடந்து செல்ல சிரமத்துக்கு உள்ளாகி வருகிறோம். எனவே, நிறுத்தப்பட்ட பாலம் பணியை மீண்டும் தொடங்கி விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE