நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு | சென்னை மாணவர் பிரபஞ்சன் 720-க்கு 720 பெற்று முதலிடம்

By செய்திப்பிரிவு

சென்னை: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில் நாடு முழுவதும் 11.45 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், தேசிய அளவில் சென்னை மாணவர் பிரபஞ்சன் 720-க்கு 720 மதிப்பெண்ணுடன் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். முதல் 10 இடங்களில் 4 தமிழக மாணவர்கள் இடம்பிடித்துள்ளனர்.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற் றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல், ராணுவ நர்ஸிங் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்ஸிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்திவருகிறது.

இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 499 நகரங்களில் கடந்த மே 7-ம் தேதி நடத்தப்பட்டது. தேர்வு எழுத மொத்தம் 20.87 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அதில் 20.38 லட்சம் பேர் தேர்வை எழுதினர். தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வில் பங்கேற்றனர். தேர்வுக்கான விடைக்குறிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது.

தேர்ச்சி விகிதம் குறைவு: இந்நிலையில் நீட் தேர்வு முடிவு நேற்று இரவு வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் மொத்தம் 11.46 லட்சம் மாணவர்கள் (56.21%) தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 0.07% சதவீதம் குறைவு. தமிழகத்தை பொருத்தவரை 1 லட்சத்து 44,514 பேர் தேர்வு எழுதியதில் 78,693 மாணவர்கள் (54.45%) தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 99,610 பேர் தேர்வு எழுதியதில் 57,215 மாணவர்கள் (57.43%) தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, ஓபிசி - 5.25 லட்சம் பேர், எஸ்சி - 1.54 லட்சம் பேர், எஸ்டி - 56,381 பேர், பொதுப்பிரிவு (யுஆர்) - 3.12 லட்சம் பேர், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினர் (EWS) - 98,322 பேர் தகுதி பெற்றுள்ளனர். மேலும், மாற்றுத் திறனாளிகள் 3,508 பேரும் மருத்துவம் படிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இதற்கிடையே, கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் தொடர்ந்து சரிந்து வருகிறது. 2018-ம் ஆண்டு 56.27% இருந்த தேர்ச்சி அளவு 2019-ல் 56.50 சதவீதமாக உயர்ந்தது. அதன்பின் 2020-ல் 56.44%, 2021-ல் 56.34%, 2022-ல் 56.28%, 2023-ல் 56.21% என தேர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது.

தமிழக மாணவர் முதலிடம்: நீட் தேர்வில் சென்னையை சேர்ந்த மாணவர் ஜே.பிரபஞ்சன், ஆந்திராவை சேர்ந்த போரா வருண் சக்ரவர்த்தி ஆகியோர் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளனர். தமிழகத்தை சேர்ந்த கவுஸ்தவ் பவுரி 716 மதிப்பெண்களுடன் 3-ம் இடம் பெற்றுள்ளார். 6-வது இடத்தில் என்.சூர்யா சித்தார்த் (715), 9-வது இடத்தில் எஸ்.வருண் (715) என முதல் 10 இடங்களில் தமிழக மாணவர்கள் 4 பேர் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். தேசிய அளவில் முதலிடத்தையும், டாப் 10 பட்டியலில் 4 இடங்களிலும் தமிழக மாணவர்கள் இடம்பெறுவது இதுவே முதல்முறை.

அரசுப் பள்ளி ஆசிரியரின் மகன்: நீட் தேர்வில் முதல் முயற்சியிலேயே 720-க்கு 720 மதிப்பெண் பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ள மாணவன் பிரபஞ்சனின் சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர். இவரது தந்தை ஜெகதீஷ், விழுப்புரம் மாவட்டம் மேல் ஒலக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றுகிறார். இவரது தாயும் ஆசிரியராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்ஆஃப் மதிப்பெண்கள்: நீட் தேர்வில் தகுதிபெற்ற மாணவர்களுக்கான கட்ஆஃப் மதிப்பெண் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி பொதுப்பிரிவு மற்றும் EWS பிரிவினருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள 720 முதல் 137 வரையான மதிப்பெண்களில் (50 பெர்சன்டைல்) 10.14 லட்சம் பேர் இடம்பெற்றுள்ளனர். ஓபிசியில் 136 முதல் 107 வரையான மதிப்பெண்களில் (40 பெர்சன்டைல்) 88,592 பேரும், எஸ்சி, எஸ்டி பிரிவில் 136 முதல் 107 மதிப்பெண்களில் (40 பெர்சன்டைல்) 42,355 பேரும் இடம்பிடித்துள்ளனர்.

பொதுப்பிரிவு மற்றும் EWS பிரிவு மாற்றுத் திறனாளிகளுக்கு 136 முதல் 121 வரையான மதிப்பெண் களில் (45 பெர்சன்டைல்) 405 பேரும், ஓபிசி, எஸ்சி, எஸ்டி மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 136 முதல் 93 வரையான மதிப்பெண்களில் (40 பெர்சன்டைல்) 252 பேரும் இடம்பெற்றுள்ளனர். நீட் நுழைவுத்தேர்வில் கடந்த ஆண்டைவிட கட்ஆஃப் மதிப்பெண் சற்று உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE