நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு: 99.99% பெற்று தமிழக மாணவர் பிரபஞ்சன் முதலிடம்

By செய்திப்பிரிவு

சென்னை: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தகுதித் கடந்த மே மாதம் நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இன்று (ஜூன் 13) வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த மாணவர் பிரபஞ்சன் 99.9999019% பெற்று முதலிடம் பெற்றுள்ளார். அவருடன் ஆந்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த போரா வருண் சக்கரவர்த்தியும் எனும் மாணவரும் முதலிடம் பிடித்துள்ளார்.

தமிழகத்தில் சுமார் 1.44 மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதி இருந்தனர். இதில் 78,693 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முக்கியமாக இந்த தேர்வில் அகில இந்திய அளவில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்களில் 4 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் பயிலவும், கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

அதேபோல, ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பி.எஸ்சி. நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

அதன்படி, 2023-24-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 490 நகரங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் நடைபெற்றது. தமிழகத்தில் சென்னை, மதுரை,கோவை உள்ளிட்ட 24 மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த 200 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. இதில்தான் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார் மாணவர் பிரபஞ்சன். அவர் 720 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். 99.9999019 சதவீதம் எடுத்து முதலிடம். அவர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவுஸ்தவ் பவுரி - 716 மதிப்பெண்கள், சூர்யா சித்தார்த் - 715 மதிப்பெண்கள், வருண் 715 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இவர்கள் மூவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள். அகில இந்திய அளவில் முறையே 3, 6 மற்றும் 9-வது இடங்களை இவர்கள் பிடித்துள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் இந்த தேர்வில் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதை தொடர்ந்து மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் மாநில மாணவர்கள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE