கல்வி நிறுவனங்களின் தேசிய தரவரிசை பட்டியல் வெளியீடு - சென்னை ஐஐடி தொடர்ந்து 5-வது ஆண்டாக முதலிடம்

By செய்திப்பிரிவு

சென்னை: உயர்கல்வி நிறுவனங்களின் தேசிய தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில், ஒட்டுமொத்த செயல்பாட்டுப் பிரிவில் சென்னை ஐஐடி தொடர்ந்து 5-வது ஆண்டாக முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. கல்லூரிகள் பிரிவில் சென்னை மாநிலக் கல்லூரி 3-ம் இடம் பிடித்துள்ளது.

மத்தியக் கல்வி அமைச்சகம் சார்பில் உயர்கல்வி நிறுவனங்களின் தேசிய தரவரிசைப் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்த செயல்பாடு, பல்கலைக்கழகம், கல்லூரி, பொறியியல், நிர்வாகம், மருத்துவம், ஆராய்ச்சி, வேளாண்மை, கண்டுபிடிப்பு என 13 பிரிவுகளில் உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை உருவாக்கப்படுகிறது.

கற்றல், கற்பித்தல், ஆராய்ச்சி, புதுமை நடைமுறை, மாணவர்களின் கல்வித்தரம் என பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இந்த தரவரிசை தயாரிக்கப்படுகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டு தரவரிசைப் பட்டியல் தகுதிக்கு நாடு முழுவதும் 8,686 உயர்கல்வி நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்நிலையில், 2023-ம் ஆண்டுக்கான உயர்கல்வி நிறுவனங்களின் தேசிய தரவரிசைப் பட்டியலை மத்திய கல்வி இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் டெல்லியில் நேற்று வெளியிட்டார்.

அதன்படி, ஒட்டுமொத்த செயல்பாட்டுப் பிரிவில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. தொடர்ந்து 5-வது ஆண்டாக இக்கல்வி நிறுவனம் முதலிடம் பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரு ஐஐஎஸ்சி நிறுவனம் 2-ம் இடத்தையும், டெல்லி ஐஐடி 3-ம் இடத்தையும் பிடித்துள்ளன. தொடர்ந்து, மும்பை ஐஐடி, கான்பூர் ஐஐடி, கரக்பூர் ஐஐடி, ரூர்க்கி ஐஐடி, குவஹாத்தி ஐஐடி ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

பல்கலைக்கழகப் பிரிவில் பெங்களூரு ஐஐஎஸ்சி முதலிடம், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இரண்டாமிடம், ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் 3-ம் இடம், ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் 4-ம் இடம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் 5-ம் இடத்தையும் பிடித்துள்ளன.

ஒட்டுமொத்த செயல்பாடுகள் பிரிவில் மட்டுமின்றி, பொறியியல் பிரிவிலும் சென்னை ஐஐடி முதலிடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, டெல்லி ஐஐடி, மும்பை ஐஐடி, கான்பூர் ஐஐடி, ரூர்க்கி ஐஐடி, கரக்பூர் ஐஐடி, குவஹாத்தி ஐஐடி, ஐதராபாத் ஐஐடி, திருச்சி என்ஐடி, ஜாதவ்பூர் பல்கலை. அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.

கல்லூரிகள் பிரிவில் டெல்லி மிரான்டா கல்லூரி முதலிடம், டெல்லி இந்துக் கல்லூரி 2-ம் இடம், சென்னை மாநிலக் கல்லூரி 3-ம் இடம், கோவை பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி 4-ம் இடம், கொல்கத்தா சேவியர் கல்லூரி 5-ம் இடம், டெல்லி ஆத்மாராம் சனாதன் தர்மக் கல்லூரி 6-ம் இடம், சென்னை லயோலா கல்லூரி 7-ம் இடம் பிடித்துள்ளன.

நிர்வாகப் பிரிவில் அகமதாபாத் ஐஐஎம் முதலிடம், பெங்களூரு ஐஐஎம் 2-ம் இடம், கோழிக்கோடு ஐஐஎம் 3-ம் இடத்தைப் பிடித்துள்ளன. மருத்துவப் பிரிவில் டெல்லி எய்ம்ஸ், சட்டப் பிரிவில் பெங்களூரு தேசிய சட்டப் பள்ளி முதலிடம் பெற்றுள்ளன.

சென்னை ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி கூறும்போது, “நாங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளுக்கு கிடைத்துள்ள அங்கீகாரமாக இந்த சாதனையைக் கருதுகிறோம். கல்வி மற்றும் ஆராய்ச்சியில் முன்னனி நிறுவனமாக ஐஐடிதிகழ்வது இதன்மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஐஐடியின் வளர்ச்சிகென உருவாக்கப்பட்ட புதிய உத்தி மற்றும் செயல்திட்டங்களுடன் நாங்கள் பயணிப்பது பெருமையாக உள்ளது” என்றார்.

சென்னை மருத்துவ கல்லூரி 11-வது இடம் பிடித்தது: மருத்துவக் கல்வி நிறுவனங்களில் முதல் 50 இடத்தை பிடித்த கல்லூரிகள் பட்டியலில் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மூன்றாம் இடத்தையும், சென்னை மருத்துவக் கல்லூரி 11-வது இடத்தையும் பிடித்துள்ளன. முதல் 50 கல்லூரிகள் பட்டியலில் சென்னை மருத்துவக் கல்லூரியும் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியும் இடம்பெற்றுள்ளன. தமிழகத்தில் உள்ள 8 மருத்துவக் கல்லூரிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அதில், 7 தனியார் மருத்துவக் கல்லூரிகள், ஒன்று மட்டும் அரசு மருத்துவக் கல்லூரி ஆகும்.

இதுதொடர்பாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் தேரணிராஜன் கூறும்போது, “தேசிய அளவில் சென்னை மருத்துவக் கல்லூரி 11-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னை மருத்துவக் கல்லூரி முன்னேறி வருகிறது. 2021-ம் ஆண்டில் 16-வது இடம், 2022-ம் ஆண்டில் 12-வது இடத்தில் இருந்த சென்னை மருத்துவக் கல்லூரி, 2023-ம் ஆண்டில் 11-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்தியாவில் மாநில அரசுகளால் நடத்தப்படும் மருத்துவக் கல்லூரிகளில் சென்னை மருத்துவக் கல்லூரி உயர்ந்த நிலையை பெற்றுள்ளது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

18 hours ago

கல்வி

21 hours ago

கல்வி

22 hours ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

6 days ago

கல்வி

7 days ago

கல்வி

7 days ago

கல்வி

8 days ago

கல்வி

8 days ago

மேலும்