திருப்பத்தூர் அருகே சாலையில் திடீர் பள்ளம்: பண்டகக்குழியாக இருக்கலாம் என தகவல்

By ந. சரவணன்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே சாலையின் நடுவே 10 அடிக்கு திடீரென பள்ளம் ஏற்பட்டது. இது பண்டகக்குழியாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம், மட்றபள்ளியில் மசூதி தெரு உள்ளது. இங்கு, 250-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் இருந்து மாம்பாக்கம் செல்லும் சாலையில்நேற்று (வியாழன்கிழமை) கனரக வாகனம் ஒன்று சென்றது. அப்போது சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம் ஒன்று ஏற்பட்டது.அந்த பள்ளத்தில் கனரக வாகனத்தின் சக்கரம் சிக்கிக்கொண்டது.

இதையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் ஒன்றிணைந்து சிறிது நேரம் போராட்டத்துக்கு பிறகு வாகனத்தை அந்த பள்ளத்தில் இருந்து மீட்டு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து சிறிய பள்ளமாக இருந்த அந்த இடம் இன்று பார்த்தபோது ஏறத்தாழ 10 அடி ஆழத்துக்கு சுரங்கம் போல மாறி காட்சியளித்தது. அந்த பள்ளமானது முன் பகுதி சிறியதாகவும், உள் பகுதி அகன்றவாறு காணப்பட்டதால் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அந்த பள்ளத்தை வியப்புடன் பார்த்தனர்.

திருப்பத்தூர் அருகே சாலையின் நடுவே திடீரென பள்ளம் ஏற்பட்ட தகவல் சமூக வலைதளங்களில் நேற்று வைரல் ஆனது. இதையடுத்து, திருப்பத்தூர் வருவாய் துறயைினர் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் அங்கு சென்று ஆய்வு நடத்தினர்.

இது குறித்து திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லுாரியின் தமிழ்த் துறை பேராசிரியர் முனைவர்.பிரபு, இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தியாளரிடம் கூறியது: “பண்டைய காலங்களில் மக்கள் தங்கள் வசதிக்கு பகுதிக்கு ஏற்ப பள்ளம் தோண்டி தானியங்கள் மற்றும் விளை பொருட்களை சேமித்து வைப்பது வழக்கமாக இருந்தது. இந்த பள்ளத்தை அந்த காலத்தில் ‘பண்டகக்குழி’ என்பார்கள்.

பண்டகக்குழி அடிபகுதியை சமன் செய்து காற்று, தண்ணீர் கூட உள்ளே நுழையாதவாறு அந்த குழியின் அமைப்பு வடிவமைக்கப்பட்டு இருக்கும். அதில் தானியங்கள் மற்றும் விளைப்பொருட்களை சேமித்து மேற்பரப்பில் கற்பலகைகளை கொண்டு மூடி போட்டு பாதுகாப்பார்கள். தற்போதுள்ள காலக்கட்டத்தில் இது வழக்கத்தில் இல்லை. திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரட்டி அருகே ஏற்கனவே இது போன்று பண்டகக்குழி கண்டறியப்பட்டது.

இந்நிலையில், தற்போது மட்றப்பள்ளியில் ஏற்பட்டுள்ள பள்ளம் பண்டகக்குழியா என்பதை குழியில் இறங்கி ஆய்வு செய்த பிறகு தான் அதை உறுதிப்படுத்த முடியும். மேலும் மழை நீரோட்டம் காரணமாக இயற்கையாக இது போன்ற பள்ளம் ஏற்படவும் வாய்ப்புள்ளது” என்றார். திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி சுற்றுவட்டார பகுதிகளில் இதுவரை 3 பண்டகக்குழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும். தற்போது மட்றப்பள்ளி அருகே ஏற்பட்டுள்ள பள்ளம் பண்டகக்குழியாக இருக்கலாம் என்பதால் அதை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE