பட்டுக்கோட்டை அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் ரூ.11.10 லட்சம் முறைகேடு: மூவர் இடைநீக்கம்

By வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.11.10 லட்சம் முறைகேடு செய்ததாக கொள்முதல் பணியாளர்கள் மூவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மண்ணங்காடு கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதற்காக தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.

இந்த கொள்முதல் நிலையத்தில் கடந்த மார்ச் மாதம் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு, குடோனுக்கு நெல் மூட்டைகள் அனுப்பப்பட்டு வந்தது. இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட ரூ.11 லட்சத்து 10 ஆயிரத்து 720 மதிப்பிலான 1,240 நெல் மூட்டைகள் சேமிப்பு குடோனுக்கு வரவில்லை.

மேலும், கொள்முதல் முடிந்ததும் அங்கு பணியாற்றிய பட்டியல் எழுத்தர் எம்.பாலு, கொள்முதல் உதவியாளர் ஆர்.தியாகராஜன் ஆகியோர் கொள்முதல் தொடர்பான கணக்குகளை நிர்வாகத்திடம் முறையாக வழங்காமல் இருந்துள்ளனர். இதையடுத்து கடந்த மே மாதம் கொள்முதல் நிலையத்தில் எவ்வளவு நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டது, கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு உரிய தொகை வங்கி மூலம் எவ்வளவு பட்டுவாடா செய்யப்பட்டது என்பது குறித்து தணிக்கை செய்யப்பட்டது.

அதில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.11.10 லட்சம் முறைகேடு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து கொள்முதல் நிலையத்தில் பணியாற்றிய பட்டியல் எழுத்தர் எம்.பாலு, கொள்முதல் உதவியாளர் ஆர்.தியாகராஜன் ஆகியோரும், கொள்முதல் நிலையப் பணிகளை முறையாக கண்காணிக்க தவறிய கொள்முதல் அலுவலர் பி.தங்கையனும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், அரசு நிதி ரூ.11.10 லட்சத்தை மோசடி செய்ததாகவும், அதை மீட்டுத் தருமாறு பட்டுக்கோட்டை கோட்ட மேலாளர் லதா பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் கடந்த 11 -ம் தேதி புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீஸார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் முதுநிலை மண்டல மேலாளர் ஆர்.ஸ்ரீமோகனா நம்மிடம் பேசுகையில், ''மண்ணங்காடு கொள்முதல் நிலையத்தில் பணியாற்றும் சுமை தூக்குபவர்களின் உதவியோடு, போலி ஆவணங்கள் மூலம், நெல் பிடித்தம் செய்ததாக, ரூ.11.10 லட்சம் வங்கி மூலம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இந்த தொகையை பட்டியல் எழுத்தர் எடுத்து முறைகேடு செய்துள்ளார்.

இந்த முறைகேட்டுக்கு கொள்முதல் உதவியாளரும் துணை புரிந்துள்ளார். எனவே இவர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதோடு இல்லாமல், இரண்டு ஆண்டுகளுக்கு பிளாக் லிஸ்ட்டில் வைக்கப்பட்டுள்ளனர். மண்ணங்காடு கொள்முதல் நிலையத்தின் பணிகளை தினமும் கண்காணிக்காமல், மெத்தனமாக செயல்பட்ட கொள்முதல் அலுவலர் தங்கையனும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE