குவைத் தீ விபத்தில் ராயபுரம் சிவசங்கர் உயிரிழப்பு: மகனை தேசிய கிரிக்கெட் வீரராக்கும் கனவு நிறைவேறுமா?

By செய்திப்பிரிவு

சென்னை: குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ராயபுரத்தைச் சேர்ந்த சிவசங்கர் உயிரிழந்த நிலையில், ‘தனது மகனை தேசிய கிரிக்கெட் வீரராக உருவாக்கும் அவரது கனவு நிறைவேறுமா’ என குடும்பத்தினர் சோகத்தில் தவித்து வருகின்றனர்.

சென்னை ராயபுரத்தை சேர்ந்தவர் சிவசங்கர்(48). கடந்த 20 ஆண்டுகளாக சரக்கு லாரி ஓட்டுநரான பணியாற்றி வந்தார். சிறிய டிரான்ஸ்போர்ட் நிறுவனமும் நடத்தி வந்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த நஷ்டத்தை ஈடுசெய்வதற்காக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் குவைத்தில் ஓட்டுநராக பணிபுரியச் சென்றுள்ளார்.

அந்நாட்டின் மங்காஃப் நகரத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கி வேலை செய்து வந்துள்ளார். அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் கடந்த 12-ம் தேதி தீ விபத்தில் 7 தமிழர்கள் உட்பட 41 இந்தியர்கள் உயிரிழந்தனர். அதில் ராயபுரம் சிவசங்கரும் ஒருவர்.

இவருக்கு மனைவி ஹேமகுமாரி (42), மகள் ஷாத்திகா (21), மகன் தீபக் ராஜ் (17) ஆகியோர் உள்ளனர். மகள் ஷாத்திகா பி.காம். 3-ம் ஆண்டு தேர்வெழுதியுள்ளார். தேர்வு முடிவுக்காக காத்துக்கொண்டிருக்கிறார். மகன் தீபக் ராஜ், சாந்தோம் செயின்ட் பீட்ஸ் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். இவர் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் உடையவர். மாநில அளவிலான போட்டிகளில் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் விளையாடி வந்துள்ளார். 10-ம் வகுப்புத் தேர்வில் 470 மதிப்பெண் பெற்று, பள்ளி அளவில் முதலிடமும் பிடித்துள்ளார்.

தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க போதிய பணம் இல்லாமலும், ஸ்பான்சர் கிடைக்காமலும் உள்ளார். குடும்பத் தலைவர் சிவசங்கரின் உயிரிழப்பு, அக்குடும்பத்தை நிலைகுலையச் செய்துள்ளது. அவரது மறைவு ராயபுரம் பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது தொடர்பாக சிவசங்கரின் தம்பி சங்கர் கூறும்போது, “இவ்வளவு சீக்கிரமாக மறைவார் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. தீ விபத்து ஏற்படுவதற்கு முந்தைய நாள்தான் குடும்பத்தினருடன் செல்போனில் பேசியுள்ளார். அப்போது பட்டப் படிப்பை முடித்த மகளின் திருமணம் குறித்து தனது மனைவியிடம் பேசியுள்ளார். குடும்பக் கடனை அடைப்பதற்காகத்தான் வெளிநாடு சென்றார். கடனை முழுமையாக அடைக்காத நிலையில், தீ விபத்தில் உயிரிழந்துள்ளார். குடும்பத்தை கடனில் விட்டுச் சென்றது எங்கள் அனைவரையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது” என்றார்.

சிவசங்கரின் மகன் தீபக் ராஜ் பேசும்போது, “தீ விபத்துக்கு முந்தைய நாள் அப்பா என்னிடம் பேசினார். விளையாட்டில் மட்டுமல்லாது கல்வியிலும் கவனம் செலுத்துமாறு தொடர்ந்து கூறுவார்; அன்றும் அறிவுறுத்தினார். தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்பதற்கான செலவை விசாரித்து வைக்குமாறும், அந்த தொகையை சேமித்து அனுப்புவதாகவும், விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்றும் கூறினார்.

இதுதான் அப்பா என்னிடம் கடைசியாக பேசியது. அடுத்தநாளே வந்த அவரது மரணச் செய்தி எங்கள் குடும்பத்தையும், எங்கள் எதிர்கால கனவையும் சிதைத்து விட்டது. எங்கள் குடும்ப எதிர்காலமே இருண்டு போயுள்ளது” என வேதனையுடன் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE