கரூர்: புகழூர் டிஎன்பிஎல் நிறுவனத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்

By க.ராதாகிருஷ்ணன்

கரூர்: தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்கள் மற்றும் ரசாயன துர்நாற்றம் ஆகியவற்றை கண்டித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

கரூர் மாவட்டம் புகழூர் அருகேயுள்ளது மூலிமங்கலம். இப்பகுதி மக்கள் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன சிமெண்ட் ஆலை துகள்கள் மற்றும் ரசாயன ப்ளான்டின் துர்நாற்றம் ஆகியவற்றால் பொதுமக்களுக்கு தலைவலி, மூச்சுத்திணறல் ஏற்படுவது குறித்து புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் அப்பகுதி மக்கள் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன நுழைவாயில் 1 மற்றும் 2 கேட்கள் முன்பு இன்று (ஜூன் 15ம் தேதி) பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதியம் தொடங்கி 1 மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் தொடர்ந்ததால் ஷிப்ட் முடிந்து வெளியே வரவும் மற்றும் மதியம் 2 மணி ஷிப்ட்டுக்கு நிறுவனத்திற்குள் செல்ல முடியாமல் தொழிலாளர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து புகழூர் நகராட்சி தலைவர் குணசேகரன், நிறுவன அலுவலர்கள், வேலாயுதம்பாளையம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்களின் பாதிப்புகள் குறித்து உடனடியாக நிறவனம் சார்பில் ஆய்வு நடத்தி விரைவில் தீர்வு காணப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக் கொண்டு கலைந்து சென்றனர்.

மதியம் 1 மணி முதல் மதியம் 2.30 மணி வரை நடந்த போராட்டத்தால் ஷிப்ட் முடிந்து வெளியே வரும் தொழிலாளர்கள் வெளியே செல்ல முடியாமலும், மதியம் 2 மணிக்கு ஷிப்டுக்கு உள்ளே செல்ல வேண்டிய தொழிலாளர்கள் உள்ளே செல்ல முடியாமலும் காத்திருந்தனர். போராட் டம் முடிந்த பிறகே தொழிலாளர்கள் நிறுவனத்தில் இருந்து வெளியே வரவும், வெளியேயிருந்த உள்ளே செல்லவும் முடிந்தது. இதனால் சுமார் ஒன்றரை மணி நேரம் அப்பகுதியில் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE