மேட்டுப்பாளையம் - குன்னூர் ரயிலுக்கு 125 வயது நிறைவு: சுற்றுலா பயணிகளுடன் கேக் வெட்டி கொண்டாட்டம்

By ஆர்.டி.சிவசங்கர்


குன்னூர்: மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே மலை ரயில் இயக்கம் தொடங்கி 125 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு சுற்றுலா பயணிகளுடன் மலை ரயில் ஆர்வலர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.

மலை பிரதேசம் என்றாலே இயற்கையின் அழகுக்கு குறைவில்லாத இடம்தான். அதை மலைகளின் மடிப்புகளின் வழியே ரயில் மூலம் கண்டுகளிப்பது பேரானந்த அனுபவமாக இருக்கும். நீலகிரி மாவட்டத்துக்குச் செல்லும் சுற்றுலா பயணிகள் அனைவரும் நிச்சயம் சுற்றிப்பார்க்க ஆசைப்படுவது, மலை ரயில் வழியாக மலைகளின் அழகை. ஆசியாவிலேயே இன்னமும் பல்சக்கரங்களில் இயங்கும் ஒரே மலை ரயில் நீலகிரி மலை ரயில் ஆகும். இந்த நீலகிரி மலைரயில் 208 வளைவுகளின் வழியாக வளைந்தும் நெளிந்தும் 16 குகைகளுக்குள் புகுந்து வெளியேறி 250 பாலங்களை கடந்து 5 மணி நேரம் பயணிக்கிறது. இந்த மலை ரயில் முதல்முறையாக குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்பட்ட தினம் இன்று (ஜூன் 15).

1880-ம் ஆண்டு குன்னூர் ரயில்வே கம்பெனி தொடங்கப்பட்டது. ஆனால், போதிய நிதி கிடைக்காததால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. பின்னர் 1890-ம் ஆண்டில் நீலகிரி மலை ரயில் கம்பெனி பல்சக்கரங்களால் ஆன தண்டவாளத்தை குன்னூர் வரைக்கும் அமைத்தது. இதையடுத்து நீராவி இன்ஜின் மூலம் இயக்கப்பட்ட குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை ரயிலானது 1899-ம் ஆண்டு ஜூன்-15 ஆம் தேதி தனது முதல் பயணத்தை தொடங்கியது.

மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே மிகவும் சரிவான பாதை என்பதால், தண்டவாளங்களுக்கிடையே பல்சக்கரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதனை பற்றிக்கொண்டே ரயில் இயங்குகிறது. இன்றுடன் தனது 125-வது ஆண்டினை நிறைவு செய்துள்ளது இந்த ரயில். இதனைக் கொண்டாடும் வகையில் மலை ரயில் மற்றும் குன்னூர் ரயில் நிலையம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. கேக் வெட்டி இந்த நாளை கொண்டாடிய மலை ரயில் ஆர்வலர்கள், சுற்றுலா பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கியும் புகைப்படங்கள் எடுத்தும் மகிழ்ந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE