சென்னை | கொடுங்கையூர் குப்பை கிடங்கில் 8.3 டன் குட்கா, புகையிலைப் பொருட்கள் அழிப்பு

By ம.மகாராஜன்

சென்னை: சென்னை கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் 8.3 டன் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் அதிகாரிகள் முன்னிலையில் இன்று (சனிக்கிழமை) அழிக்கப்பட்டன.

தமிழகத்தில் குட்கா, புகையிலை பொருட்களை விற்க தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தடையை மீறி வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட மற்றும் கடைகளில் விற்கப்பட்ட குட்கா பொருட்களை உணவு பாதுகாப்பு அலுவலர்கள், காவல்துறையினர் மற்றும் வணிக வரித்துறையினர் ஆங்காங்கே சோதனை நடத்தி கிலோ கணக்கில் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இவ்வாறு சென்னை மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.3 கோடி மதிப்பிலான 8,286 கிலோ (8.3 டன்) தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பாதுகாப்பான முறையில் அழிப்பதற்காக உணவு பாதுகாப்புத் துறையினர் சென்னை கொடுங்கையூரில் உள்ள குப்பை கிடங்குக்கு கொண்டு சென்றனர்.

அங்கு காவல்துறை அதிகாரிகள் மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில், பறிமுதல் செய்யப்பட்ட 8.3 டன் புகையிலை பொருட்களை கொட்டி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அழித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE