திருப்பத்தூர் தனியார் பள்ளியில் நுழைந்த சிறுத்தை: மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க வனத்துறை முயற்சி

By ந. சரவணன்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தை ஒட்டியுள்ள தனியார் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை சிறுத்தை நுழைந்ததால் மாணவிகள், ஆசிரியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து, மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை: திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்பக்க நுழைவு வாயிலையொட்டி தனியாருக்குச் சொந்தமான பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியின் ஒரு பகுதியில் வர்ணம் பூசும் பணிகள் நடந்து வருகிறது. இதில், 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று மாலை 4 மணியளவில் வர்ணம் பூசம் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த போது பள்ளி வளாகத்துக்குள் சிறுத்தை ஒன்று நுழைந்தது.அப்போது பள்ளி மைதானத்தில் இருந்த மாணவிகள், ஆசிரியர்கள் சிறுத்தையை கண்டதும் அலறி கூச்சலிட்டு தலைதெறிக்க ஓடினர். இந்த சத்தத்தை கேட்டதும் சிறுத்தை அங்கிருந்து பாய்ந்து ஓடியது.

முதியவர் காயம்: அப்போது, வர்ணம் பூசும்பணியில் இருந்த திருப்பத்தூர் அடுத்த புத்தகரம் பகுதியைச் சேர்ந்த கோபால் (52) என்பவரை சிறுத்தை தாக்கியது. இதில், அவரது இடதுப்புறம் தலையில் காயம் ஏற்பட்டது.உடனே, அங்கிருந்த சக தொழிலாளர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதைதொடர்ந்து, பள்ளியில் இருந்த மாணவ,மாணவிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். ஆசிரியர்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர். உடனே, பள்ளி நுழைவு வாயில் கதவு மூடப்பட்டது. இதையடுத்து, தனியார் பள்ளியை ஒட்டியுள்ள சுற்றுச்சுவரை தாண்டி அருகேயுள்ள குடியிருப்புப் பகுதிக்குள் சிறுத்தை நுழைந்தது. அங்கு சென்ற சிறுத்தை மனிதர்களின் சத்தத்தை கேட்டதும் அங்குள்ள ஒரு வீட்டில் நுழைந்து அங்கேயே தஞ்சமடைந்தது.

ஆளில்லாத வீட்டில் தஞ்சம்: இது குறித்து தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிறுத்தை பதுங்கியிருக்கும் இடத்தை சுற்றி பாதுகாப்பு வேலி அமைத்தனர். மனிதர்கள் யாரும் குடியிருப்புப் பகுதிக்குள் நுழையாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தனர்.
சிறுத்தை வெளியே வராமல் அங்கு ஆளில்லாத ஒருவரது வீட்டிலேயே தஞ்சமடைந்ததால், அதை பிடிக்கும் முயற்சியை எடுத்தனர். நீண்ட நேரம் ஆகியும் சிறுத்தையை பிடிக்க முடியாததால் அதை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான நடவடிக்கைகளை வனத்துறையினர் எடுத்துள்ளனர்.

வனத்துறை நடவடிக்கை: இதற்கிடையே, வேலூர், ஒசூர் பகுதியில் இருந்து வனத்துறையினர் திருப்பத்தூருக்கு வரவழைக்கப்பட்டனர். 3 பிரிவுகளாக பிரிந்த வனத்துறையினர் சிறுத்தையால் யாருக்கும் ஆபத்து நேராத வகையில் சிறுத்தையை பிடிப்பதற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், திருப்பத்தூரில் சிறுத்தை நுழைந்த தகவல் அறிந்ததும் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட்ஜான், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து சிறுத்தை பிடிப்பதற்கான பணிகளை துரிதப்படுத்தி சிறுத்தை செயல்பாடுகளை கண்காணித்து வருகின்றனர்.

மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க முயற்சி: இது குறித்து திருப்பத்தூர் வனத்துறையினர் கூறியதாவது, “திருப்பத்தூர் மாவட்டத்தில் கொத்தூர் வனப்பகுதி மற்றும் நாகலந்தூர் வனப்பகுதியில் மட்டுமே சிறுத்தை நடமாட்டம் உ்ள்ளது. இதில், ஆட்சியர் அலுவலக வளாகத்தை ஒட்டியுள்ள பள்ளியில் நுழைந்த சிறுத்தை எங்கிருந்து வந்தது? என ஆய்வு செய்து வருகிறோம். முதல் கட்ட ஆய்வில் கொத்தூர் வனப்பகுதியில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த சிறுத்தை ஆணா? பெண்ணா? என தெரியவில்லை. 20 கி.மீ., தொலைவில் உள்ள கொத்தூர் வனப்பகுதியில் இருந்து சிறுத்தை எந்த வழியாக வந்தது ? என ஆராய்ந்து வருகிறோம்.

சிறுத்தையைப் பிடிக்க வலை தயாராக உள்ளது. மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையைப் பிடிக்க முயற்சி எடுத்து வருகிறோம். இரவு நேரம் நெருங்கிவிட்டதால் மின்விளக்கு வெளிச்சத்தில், மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை சில மணி நேரங்களில் பிடித்து விடுவோம். சிறுத்தை பிடிப்பதில் அதிக பயிற்சி பெற்ற வனத்துறையினர் வேலூர், ஒசூர் வனத்துறையில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர். விரைவில், சிறுத்தை பிடிக்கப்படும்,” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE