“40-க்கு 40 வென்ற திமுகவினரால் ஒரு பயனுமில்லை” - தங்கர் பச்சான் விமர்சனம்

By க.ரமேஷ்

கடலூர்: “மக்களவைத் தேர்தலில் 40-க்கும் 40 வெற்றி பெற்ற திமுகவினரால் ஒன்றும் பயனில்லை” என்று பாமக வேட்பாளராக போட்டியிட்ட தங்கர் பச்சான் கடலூரில் தெரிவித்தார்.

நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில், பாமக சார்பில் கடலூர் தொகுதியில் இயக்குநர் தங்கர் பச்சான் போட்டியிட்டார். இதில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்தார். இந்நிலையில், வாக்களித்த வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவிக்கும் பயணத்தை இன்று (ஜூன் 14) பாமக கட்சி நிர்வாகிகளுடன் தங்கர் பச்சான் மேற்கொண்டார்.

கடலூர் சாவடி பகுதியில் உள்ள பிடாரி அம்மன் ஆலயத்தில் நன்றி தெரிவிக்கும் பயணத்துக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், “மக்கள் வேட்பாளர்களை பார்த்து வாக்களிக்க வேண்டும். கட்சியையோ சின்னத்தையோ பார்த்து வாக்களிக்க கூடாது. 39 இடங்கள் 40 இடங்கள் என திமுகவும், அதிமுகவும் மாறி மாறி வெற்றி பெற்று மக்களுக்காக செய்தது என்ன?” என்று தங்கர் பச்சான் கேள்வி எழுப்பினார்.

மேலும் “கிடைக்கும் சிறிய அதிகாரங்களை கூட பாமக மக்களின் நலனுக்காக பயன்படுத்தியுள்ளது. நான் அரசியல்வாதி அல்ல, வென்றாலும் தோற்றாலும் மக்களுடனே இருப்பேன். மக்களை சார்ந்து என்னுடைய நடவடிக்கைகள் இருக்கும்” என்றார். அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலிலாவது மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் எனவும் தங்கர் பச்சான் கேட்டுக்கொண்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE