ஊராட்சி மன்ற நிதியில் தொடர் முறைகேடு: திருவாரூர் - மணலி ஊராட்சி கவுன்சிலர்கள் 7 பேர் ராஜினாமா

By எஸ்.கோபாலகிருஷ்ணன்

திருவாரூர்: ஊராட்சி மன்ற நிதியில் தொடர் முறைகேடு நடைபெறுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து, திருவாரூர் - மணலி ஊராட்சி கவுன்சிலர்கள் 7 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில், உள்ள மணலி ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளன. இங்கு அதிமுகவைச் சேர்ந்த சுமித்ரார் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார். துணைத் தலைவராக வேதைய்யன் உள்ளார். இந்த நிலையில், ஊராட்சி மன்றத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட நிதி ரூ.48 லட்சம் ஒதுக்கப்பட்டதில், ரூ.10 லட்சம் அளவுக்குதான் வேலை நடந்துள்ளதாகவும், மீதமுள்ள நிதி முறைகேடு செய்யப்பட்டு இருப்பதாகவும் வார்டு கவுன்சிலர்கள் சிலர் பிரச்சினையைக் கிளப்பி இருக்கிறார்கள்.

மேலும், மத்திய அரசின் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு வேலை செய்த சாலைகள் மீண்டும் சீரமைக்கப்படவில்லை, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டராக ஊராட்சி மன்ற தலைவரின் கணவரே நியமிக்கப்பட்டுள்ளார், ஆதரவற்ற அல்லது மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்க வேண்டிய ஊராட்சி மன்ற கணினி ஆபரேட்டர் பணியிடத்தை விதிகளை மீறி வெளிநாட்டில் வேலை செய்யும் நபர் ஒருவரின் மனைவிக்கு வழங்கப்பட்டுள்ளது என்றெல்லாம் குற்றம்சாட்டி, மணலி ஊராட்சியின் 7 கவுன்சிலர்கள் இன்று திருத்துறைப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தான கிருஷ்ண ரமேஷை நேரில் சந்தித்து தங்களது ராஜினாமா கடிதங்களை வழங்கினர்.

இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டபோது, “வார்டு உறுப்பினர்களின் ராஜினாமா கடிதத்தை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பிவைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் இன்னும் இரண்டு மாதத்தில் வரலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மணலி ஊராட்சியில், 7 கவுன்சிலர்கள் பதவியை ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE