வளர்ச்சியின் அடையாளம்! - வெ.சந்திரமோகன்
இந்தியாவின் திறமையை உலகம் அங்கீகரிக்கும்போது நம் எல்லோருக்கும் ஒரு பெருமித உணர்வு தோன்றுமல்லவா? அப்படிப் பெருமிதப்பட்டுக்கொள்வதற்கான தருணம்தான் இது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தயாரிப்புகள் இல்லையென்றால், பலருக்கும் வாழ்க்கையே ஓடாது. அப்படிப்பட்ட நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக (சி.இ.ஓ) அமெரிக்க வாழ் இந்தியரான சத்யா நாதெள்ள (46) பொறுப்பேற்றிருக்கிறார். அதாவது, பில் கேட்ஸ் வகித்த பதவியில் தற்போது இந்தியர் ஒருவர்!
ஹைதராபாதில் பிறந்து வளர்ந்த சத்யா நாதெள்ள, பேகம்பேட்டில் உள்ள ஹைதராபாத் பப்ளிக் ஸ்கூலில் படித்தவர். மணிப்பால் பல்கலைக்கழகத்தில் மின்பொறியியல் பட்டம் பெற்றவர். பின்னர், அமெரிக்காவில் உள்ள விஸ்கான்ஸின் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸில் எம்.எஸ். முடித்த இவர், சிகாகோ பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டம் பட்டம் பெற்றார். இவருடைய தந்தை பி.என். யுகாந்தர் ஐ.ஏ.எஸ்., நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது பிரதமர் அலுவலகத்தில் பணிபுரிந்தவர். 1992-ல் தனது தந்தையின் நண்பருடைய மகளான அனுபமாவைத் திருமணம் செய்துகொண்டார். அதே ஆண்டில்தான் அவர் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திலும் இணைந்தார்.
சாதனையும் சவால்களும்
மைக்ரோசாஃப்ட் சி.இ.ஓ. பதவியி லிருந்து பில்கேட்ஸ் பதவி விலகிய பின்னர், 2000-ம் ஆண்டு அப்பதவிக்கு வந்த ஸ்டீவ் பால்மர், தொழில்போட்டி முதல் தொழில் தொடர்பான வழக்குகள் வரை சவாலான பல விஷயங்களை எதிர்கொள்ள நேர்ந்தது. ஸ்டீவ் பால்மர் பதவி விலகுவதாகக் கடந்த ஆகஸ்டில் விருப்பம் தெரிவித்த பிறகு, ஐந்து மாத காலம் நடைபெற்ற தேடுதல் வேட்டையின் இறுதியில், க்ளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பத்தில் நல்ல தேர்ச்சி, நிர்வாகத் திறன், அதே நிறுவனத்தில் 22 ஆண்டுகள் அனுபவம் போன்ற தகுதிகள் கொண்ட சத்யா நாதெள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ-வாகத் தேர்வுசெய்யப்பட்டார். இப்படிப்பட்ட பெருமைகளெல்லாம் இருந்தாலும், முன்பைவிட அதிகமாகத் தன்னை நிரூபித்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் நாதெள்ள. கூகுள் தேடுபொறி, டேப்லட் தொழில் நுட்பம் ஆகியவை ஏற்படுத்திய கடும் போட்டியில் மைக்ரோசாஃப்ட் மிகவும் பின்தங்கிப்போயிருக்கிறது. இந்த சவால்கள் அனைத்தும் இப்போது சத்யா நாதெள்ளவின் முன் நிற்கின்றன.
மாறும் பார்வை
சமீப காலமாக அமெரிக்காவின் நிர்வாகத் துறை, நீதித் துறை, தொழில் துறை போன்றவற்றின் உயர் பதவிகளுக்கு இந்தியர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். எனினும், உலகின் மிகப் பெரிய மென் பொருள் நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக ஒரு இந்தியர் தேர்வு செய்யப்படுவது இதுவே முதல்முறை. வெளிநாட்டவர் ஒருவர் அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனத்தில் உயர்பதவிக்கு வந்திருப் பதை, அந்நாட்டுப் பத்திரிகைகளும் பிற நிறுவனங்களும் வரவேற்றிருக்கின்றன. “இதுபோல திறமை வாய்ந்த வெளி நாட்டினரைக் குடியமர்த்துவதில் அமெரிக்கா முனைப்புக் காட்ட வேண்டும்” என்று ‘வாஷிங்டன் போஸ்ட்’ கூறியிருக்கிறது.
முன்பெல்லாம் இந்தியர்களைப் பற்றிய அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் பார்வை முற்றிலும் வேறாக இருந்தது. ஏழைகள், சாமியார்கள், சாலைகளில் திரியும் பசுக்கள். இவைதான் அவர்களின் பார்வையில் இந்தியா. இந்தப் பார்வையை இந்தியர்கள் தங்கள் அறிவுத்திறனாலும் உழைப்பாலும் மாற்றிக்காட்டியிருக்கின்றனர். இனி, இந்தியர்களைப் பரிவுணர்ச்சியோடோ இளக்காரமாகவோ யாரும் பார்த்துவிட முடியாதபடி இந்தியா தொழில் துறை, சர்வதேச அரசியல் அரங்கு ஆகியவற்றில் முக்கியமான சக்தியாக ஆகியிருக்கிறது. அதன் அடையாளம்தான் சத்யா. ஒருவகையில் அவர் நவீன இந்தியாவின் வளர்ச்சியின் குறியீடும்கூட!
வெ.சந்திரமோகன்- தொடர்புக்கு: chandramohan.v@kslmedia.in
தேசம் மகிழலாம், வளராது! - சமஸ்
உலகின் பெரும் பணக்காரராக பில் கேட்ஸை உட்காரவைத்த இடம், உலகெங்கும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட, ஆண்டுக்கு ரூ. 4.8 லட்சம் கோடி வருமானம் வரும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக பீடம், ‘மைக்ரோ சாஃப்ட்’ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பணியிடம். அதில் உட்காருகிறார் சத்யா நாதெள்ள. ‘பெப்சிகோ’ நிறுவனத்தின் இந்திரா நூயி, ‘டாய்ச் வங்கி’யின் அன்ஷு ஜெயின், ‘டீயாஜீயோ’ நிறுவனத்தின் இவான் மெனிஸிஸ், ‘ரெக்கிட் பென்கிஸர்’ நிறுவனத்தின் ராகேஷ் கபூர், ‘பெர்க்ஷைர் ஹாத்வே’ நிறுவனத்தின் அஜித் ஜெயின் என ஏற்கெனவே சில பன்னாட்டுப் பெருநிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரி பணியிடங்களில் இந்தியர்கள் பணியாற்றிவந்தாலும், சத்யா நாதெள்ள தேர்வு பெரும் செய்தியாகியிருக்கிறது. ஆண்டுக்கு
ரூ. 16.65 லட்சம் கோடிக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல்செய்யும் இந்தியா போன்ற ஒரு நாட்டில், ரூ. 19.05 லட்சம் கோடி மதிப்பு கொண்ட ‘மைக்ரோ சாஃப்ட்’ நிறுவனத்தின் தலைமைப் பதவி ஏற்படுத்தும் பிரமாண்டமான பிம்பம் பிரமிக்கத் தக்கது அல்ல.
ஏன் இந்தியாவுக்குப் பயன்படவில்லை?
சத்யா கொண்டாடப்பட வேண்டியவர். சரிதான். ஆனால், நாம் பேச வேண்டிய விஷயம் அதுவல்ல; இப்படிப்பட்ட அபாரமான மூளைகளின் உழைப்பும் திறனும் ஏன் இந்தியாவுக்குப் பயன்படவில்லை?
பொதுவாக, இப்படிப்பட்ட விவாதங்களின்போது உளுத்துப்போன ஒரு வாதம் முன்வைக்கப்படுவது உண்டு:
“என்ன செய்வது? பாழாய்ப்போன நாட்டில் இப்படிப்பட்ட அபாரமான மூளைகளைப் பயன்படுத்திக்கொள்ளும் கட்டமைப்பு இல்லை. இங்கு திறமைசாலிகளுக்கு மரியாதையோ இடமோ இல்லை” என்பதே அந்த வாதம். இந்த வாதத்திலும் கொஞ்சம் உண்மையும் நியாயமும் இருக்கிறதுதான். சரி, யார் அந்தக் கட்டமைப்பை உருவாக்குவதாம்?
அரசா?
ஒரு தேசத்தின் முதல்தரமான, அபாரமான மூளைகள் தங்களுக்குத் தேவையான இடத்தை உருவாக்கும் பொறுப்பிலிருந்து ஒதுங்கும்போது, இரண்டாம்தர அரசியல்வாதி மூளைகளிடமிருந்து அதை எதிர்பார்ப்பது எப்படி நியாயமாக இருக்கும்?
துணைநின்ற தூண்கள்
இந்தியா என்ற மாபெரும் தேசத்தை உருவாக்கிய சிற்பிகள் காந்தி, நேரு போன்ற அரசியல் தலைவர்கள் மட்டும் அல்ல; அவர்களுடைய கனவைக் கட்டியெழுப்பிய எவ்வளவோ அபாரமான அதிகாரிகளும் இருக்கிறார்கள்; இந்தியாவின் தேர்தல் அமைப்பைக் கட்டமைத்த சுகுமார் சென், அரசுத் திட்டங்களுக்கு அடிப்படையை உருவாக்கிய மஹலனோபிஸ், விஞ்ஞான ஆராய்ச்சிக்கு அடித்தளமிட்ட ஹோமிபாபா இப்படி எவ்வளவோ பேர். அழகான
ஒரு முரண்பாடு என்னவென்றால், இன்றைய தலைமுறையைப் போல,இந்த நாட்டில் படித்துவிட்டு வெளிநாடுகளுக்குத் தங்கள் மூளைகளைச் செலவிட்டவர்கள் அல்ல; வெளிநாடுகளில் படித்துவிட்டு வந்து இந்த நாட்டுக்குத் தங்கள் மூளையைச் செலவிட்டவர்கள் இவர்கள். இத்தனைக்கும் இன்றைய இந்திய இளைய தலைமுறையின் முன் உள்ள வாய்ப்புகளும் வசதிகளும்கூட அன்றைக்கு அவர்கள் முன் இருக்கவில்லை.
அடிப்படைக் கோளாறு எங்கே என்றால், குழந்தைகளிடம் எதிர்காலம்பற்றிச் சொல்லிக்கொடுக்கும்போது, “மருத்துவராகி, கிராம மக்களுக்குச் சேவை செய்வேன்” என்று சொல்லச் சொல்லிக்கொடுத்த காலம் மலையேறி “மருத்துவராகிப் பெரிய மருத்துவமனை கட்டுவேன்” என்று சொல்லச் சொல்லிக்கொடுக்கும் காலமாகிவிட்டது என்பதுதான். “நான் என்னவாக ஆகப்போகிறேன்?” என்ற கேள்விக்கான பதிலில்,சமூகத்துக்கும் நாட்டுக்கும் உள்ளதொடர்பு முற்றிலுமாகச் சிதைந்துகொண்டிருக்கிறது என்பதுதான். சத்யாக்களால் தேசம் மகிழ்ச்சி அடையலாம்; நாராயண மூர்த்திகளால்தான் தேசத்தை வளர்த்தெடுக்க முடியும்!
சமஸ் - தொடர்புக்கு: samas@kslmedia.in
முக்கிய செய்திகள்
விவாதக் களம்
4 years ago
விவாதக் களம்
4 years ago
விவாதக் களம்
4 years ago
விவாதக் களம்
5 years ago
விவாதக் களம்
7 years ago
விவாதக் களம்
7 years ago
விவாதக் களம்
7 years ago
விவாதக் களம்
11 years ago
விவாதக் களம்
11 years ago
விவாதக் களம்
10 years ago
விவாதக் களம்
10 years ago
விவாதக் களம்
10 years ago
விவாதக் களம்
10 years ago
விவாதக் களம்
10 years ago
விவாதக் களம்
10 years ago