ஜெயலலிதா பெரியாரின் வாரிசா?

By விடுதலை ராஜேந்திரன்

பெரியார் தனிநபர் வழிபாட்டின் தொடக்கம் என்று எழுதுவது வரலாற்றுக்குப் புறம்பானது.

திருநாவுக்கரசு எழுதிய ‘பெரியாரின் வாரிசுதான் ஜெயலலிதா!’ கட்டுரை வாசித்தேன். “சுயமரியாதை அழித்தொழிப்பு இன்று தமிழக அரசியலில் முழுமை பெற்றிருக்கிறது என்றால், அதற்கான தொடக்கம், பெரியார் உருவாக்கி வளர்த்த சுயமரியாதை இயக்கத்திலும் திராவிடர் கழகத்திலும் இருக்கிறது” என்கிறது கட்டுரை. அந்த வகையில், ‘பெரியாரின் வாரிசுதான் ஜெயலலிதா!’ என்கிறது. சரியான பார்வையா இது?

அரசியல் அதிகாரம் என்ற ஒற்றை இலட்சியத்தோடு செயல்படும் அரசியல் கட்சிகளின் தலைமை பக்தியையும் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தையும் ஒப்பிடுவதே தவறு. பெரியார் -தேர்தலுக்காக அரசியல் கட்சி நடத்த வில்லை. சமுதாய மாற்றத்துக்காக இயக்கம் நடத்தினார்.

சுயமரியாதை என்ற சொல்லையே தமிழ்ச் சமுகத் துக்கு அறிமுகப்படுத்தியவர் பெரியார். இன்று அரசியலில் நிகழும் அழித்தொழிப்புகள், பெரியார் பேசிய சுயமரியாதைக்கு முற்றிலும் எதிரானது. தன்மானத்தைவிட இனமானமே பெரியது என்றார் பெரியார். சமூக சுயமரியாதைக்காக தனது சுய மரியாதையை பலியாக்கி, கல்லடி, முட்டை வீச்சு, செருப்பு வீச்சுகளுக்கிடையே பெரியார் இயக்கத்தை நடத்தினார்.

அதற்கு மாறாக அதிகாரம் ஒன்றே இன்றைய அரசியல் கட்சிகளின் நோக்கம். அதிகாரத்தில் பங்கு போடத் துடிப்பவர்கள் தலைமைக்கு துதி பாடு கிறார்கள். கட்சித் தலைமைகள் இதை உற்சாகமாக வரவேற்று மகிழ்கின்றன. பெரியார் - கடவுள் மத பக்தியை எதிர்த்ததுபோலவே தன்னை புகழ்ந்து பேசு வதையும் விரும்பாதவர்; தனது காலில் விழுவதை அனுமதிக்காதவர்; அதைக் கண்டித்தவர்; தன்னோடு கால் மீது கால் போட்டுக்கொண்டே மற்றவர்கள் பேசுவதில் தவறே இல்லை என்று கூறியவர். தன் முன்னால் தன்னிடம் பணிந்து கைகட்டி நிற்பதை வெறுத்தவர். மாறாக தன்னை கடுமையாக விமர்சித்துப் பேசுவதை வரவேற்றவர். அதன் மூலம் தமது கொள்கை பரவும் என்று கருதினார். அரசியல் தலைவர்களைப் போல் தன்னைத் தாக்கிப் பேசியவர்கள் மீது அவமதிப்பு வழக்குகளை அவர் தொடர்ந்தது இல்லை; மாறாக அந்த எதிர்ப்பையும் கொள்கையைப் பரப்புவதற்குப் பயன்படுத்த விரும்பியவர்.

செருப்படியை வரவேற்றவர்

சேலத்தில் 1971-ல் பெரியார் நடத்திய ஊர் வலத்தில் இந்து கடவுள்களை அவமதித்ததாக அவரது எதிர்ப்பாளர்கள் பெரியார் படத்தை எரித்து செருப்பாலடித்தபோது தானே பாதி விலையில் தனது படத்தையும் செருப்பையும் அனுப்பிவைப்பதாக அறிக்கை விடுத்தார் பெரியார்.

“நான் சொல்வது சரியா தவறா என்று சிந்தித்துப் பார்த்துச் சரியென்று பட்டால் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று மக்களிடம் கேட்டுக்கொண்ட பெரியார், ஒரு போதும் அந்தச் சிந்தனை சுதந்திரத்தை, தனது இயக்கத் திலிருந்த பிற தலைவர்களுக்கோ, தொண்டர்களுக்கோ வழங்கவில்லை” என்கிறது திருநாவுக்கரசின் கட்டுரை.

பெரியார் இயக்கம் நடத்தியது மக்களுக்கான சிந்தனை சுதந்திரத்துக்குத்தான். எனவே மக்களிடம் அந்தக் கேள்வியை வைத்தார். மேலும், இயக்கத் துக்குள்ளும்கூட கருத்துச் சுதந்திரத்தை பெரியார் அனுமதிக்காதவரும் அல்ல!

சில உதாரணங்கள்

பெரியார், பொதுவுடைமைக் கொள்கைகளைக் கைவிட்டார் என்று அப்போது பெரியார் இயக்கத் திலிருந்த தோழர்கள் சிங்காரவேலர், ஜீவா போன்ற வர்கள் பெரியாரைக் கடுமையாக விமர்சித்து எழுது வதற்கு தனது ‘குடிஅரசு’ ஏட்டிலேயே பெரியார் இடம் தந்தார்.

சுதந்திர நாளை துக்க நாள் என்று பெரியார் அறிவித்த போது அவரிடம் கருத்து மாறுபாடு கொண்டு அண்ணா ‘இன்ப நாள்’ என்று எதிர்த்து அறிக்கை வெளியிட்டார். அண்ணா மாறுபட்ட கருத்தை கூறினாலும் அந்த சிந்தனைச் சுதந்திரத்தை பெரியார் அனுமதித்தார். அடுத்த ஆண்டு 1948-ல் ஈரோட்டில் பெரியார் நடத்திய மாநாட்டில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அண்ணாவை அழைத்து சிறப்புச் செய்தார். 1949-ல் அண்ணா தாமாகவே வெளியேறினாரே தவிர, பெரி யார் இயக்கத்தைவிட்டு நீக்கவில்லை.

பெரியார் நடத்திய ‘குடிஅரசு’ பல்வேறு மாறுபட்ட சிந்தனைகளுக்கு தனது பக்கங்களை ஒதுக்கியது. கற்பு குறித்த பெரியார் கருத்தை மறுத்து தமிழறிஞர் பி.ஆர். பரமசிவ முதலியார் எழுதிய கட்டுரையை பெரியார் தனது ஏட்டிலேயே வெளியிட்டார்.

மறைந்த பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பால தண்டாயுதமும், பெரியாரும் ஒரே மேடையில் பேசியபோது ‘தேசியம்’, ‘கம்யூனிசம்’ குறித்து பெரியார் எழுப்பிய கேள்விகளுக்கு பெரியாரை மறுத்துப் பேசினார் பாலதண்டாயுதம். தோழரின் மறுப்பு உரையை எழுத்து வடிவமாக கேட்டுப் பெற்று தனது ‘விடுதலை’ நாளேட்டில் வெளியிட்டார் பெரியார்.

பொதுக் கூட்ட மேடைகளிலேய தனது கருத்தை எதிர்த்துக் கேள்விகள் கேட்க அனுமதித்தவர் பெரியார்.

மனைவி நாகம்மையாரை பொதுவுடைமை யாக்குவீர்களா என்று பொதுக்கூட்டத்தில் நேரில் எதிர்ப்பாளர்கள் கேட்டபோதுகூட பெரியார் ஆத்திரப்பட வில்லை. இதை நாகம்மையாரிடம் கேளுங்கள் என்று பதிலளித்தார். அவரது சிந்தனைச் சுதந்திரம் அந்த எல்லைக்கு நீண்டது. இன்றைய அரசியல் தலை வர்களிடம் இந்தப் பண்புகளைப் பார்க்க முடியுமா? இப்படிப் பல நிகழ்வுகளைப் பட்டியலிட முடியும்.

கேள்விக்கு அப்பாற்பட்டவராக இல்லை

எல்லா சர்வாதிகாரிகளும் சொல்லும் அதே நியாயத்தைத்தான் பெரியாரும் தனது சர்வாதிகாரத்துக்கு சொல்வதாகக் கட்டுரையாளர் எழுதுவதை வரலாறு மன்னிக்காது. சர்வாதிகாரிகளைப் போல் பெரியார் கேள்விக்கு அப்பாற்பட்ட தலைவராக இருந்த தில்லை. அதற்காக அதிகாரங்களைத் தேடி ஓடியதும் இல்லை. அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களைப் பணிய வைத்தவரும் அல்ல; மாறாக அதிகார அடுக்குமுறைகளை எதிர்கொண்டு மக்களை நிமிர்ந்து நிற்கச் சொன்னவர். இரண்டு முறை ஆட்சி அமைக்கும் வாய்ப்புகள் தன்னை நோக்கி வந்தபோதும் பிடிவாதமாக மறுத்தவர்.

விடுதலைக்குப் போராடும் ஒரு இராணுவம், தளபதியின் சர்வாதிகாரக் கட்டளைக்குப் பணிந்து நடக்க வேண்டும் என்பதைப் போன்றதுதான் பெரியாரின் இயக்கச் சர்வாதிகாரம்.

இன்று அதிமுகவின் பொதுச்செயலர் ஜெயலலிதா, தொண்டர்களால் தெய்வமாக்கப்படுகிறார். மதச் சடங்குகளே அரசியல் போராட்ட வடிவங்களாக மாற்றப்பட்டுவிட்டன. இவை எல்லாம் பெரியார் பேசிய சுயமரியாதைக் கொள்கைகளுக்கே நேர் எதிரானது. சொல்லப் போனால், பெரியார் சுயமரியாதைக் கொள்கைகளுக்கே சவால் விடக் கூடியவை. இதை பெரியார் கொள்கையின் வழி வந்தவையாக எழுதுவது வரலாற்றுக்குப் புறம்பானது.

ஊற்று எங்கே?

உண்மையில், இந்த அரசியல் கட்சிகளின் ‘தலைமை பக்தி’க்கான ஊற்று எங்கிருந்து தொடங்குகிறது? குருவுக்கு சீடன் அடிமையாவதையும் மேல் சாதிக்கு கீழ் சாதி பணிந்து போவதையும் புனிதமாகவும் சமூக தர்மமாகவும் இந்தச் சமூகத்தில் காலம்காலமாகக் கட்டமைக்கப்பட்ட உளவியலின் தொடர்ச்சிதானே?

ஆன்மிகத் தலைவர்களை கடவுள்களாக்கி குடியரசுத் தலைவர்களாக இருந்தாலும் அவர்களின் காலடியில் அமர வேண்டும் என்பதை தர்மமாக்கிய ஏற்றத்தாழ்வு தத்துவங்களின் நீட்சிதானே? இதைப் பெரியார் இயக்கத்துடன் முடிச்சுப் போடுவது முறை தானா? இப்படி மனிதர்களை ஏற்றத்தாழ்வு சிறைக்குள் அடைத்து வைத்த ‘புனித’ங்களையும், ‘தர்ம’ங்களையும் எதிர்த்துக் கேள்வி கேட்ட பெரியார் இயக்கமா இந்தச் சீரழிவுக்கு காரணம்?

முதல் சுயமரியாதை மாநாட்டை செங்கல்பட்டில் நடத்தியவரே பெரியார்தான்! மாநாட்டுத் தலைவராக சவுந்தரபாண்டியனைத் தேர்வு செய்தவரும் பெரியார் தான்! அதற்குப் பிறகு முன்மொழிதல், வழிமொழிதல் என்ற போலி சடங்குகள் வேண்டாம் என்று பெரியார் நேர்மையாக அறிவித்தது கட்டுரையாளருக்கு சர்வாதி காரமாகத் தெரிகிறது. அந்தச் சடங்குகள் நடந்திருந்தால் பெரியார் ஜனநாயகவாதியாக மாறியிருப்பாரோ! நல்ல வேடிக்கை!

உ.பி.யில் மாயாவதியின் ஊழல்களுக்கும் சர்வாதிகாரத்துக்கும் அம்பேத்கர்தான் காரணம் என்று யாராவது எழுதினால் எப்படி இருக்கும்? அப்படிதான் இருக்கிறது, திருநாவுக்கரசின் கட்டுரை!

- விடுதலை ராஜேந்திரன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலர்.

தொடர்புக்கு: viduthalaikr@gmail.com

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE