விவாதக்களம்: ஆளுநரின் தலையீடு மாநில சுயாட்சிக்கு எதிரானதா?

By செய்திப்பிரிவு

கோவையில் நேற்று (செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியர், அதிகாரிகளுடன் ஆளுநர் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், இது குறித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் என பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்துவருகின்றனர்.

"அரை நூற்றாண்டுக்கு மேல் மாநில சுயாட்சிக் கொள்கைக்காகக் குரல் கொடுத்து வரும் தமிழகத்தில் மத்திய பா.ஜ.க. அரசும், ஆளுநரும் போட்டி போட்டுக்கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொள்ளும் இந்த அரசியல் சட்டவிரோத முயற்சிக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்" இது திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் விமர்சனம்.

"கோவை மாவட்டத்தில் ஆளுநர் திடீர் ஆய்வு மேற்கொண்டது அதிர்ச்சி அளிக்கிறது. இதுவரை எந்த ஆளுநரும் மாவட்ட நிர்வாகத்தில் தலையிட்டது இல்லை" என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

"மத்திய அரசை வணங்கும் அமைச்சர்களுக்கு ஆளுநர் உள்ளூர் தெய்வமாக விளங்குகிறார். முதல்வர் நாற்காலியில் ஆளுநரே அமர்ந்தாலும் அமைச்சர்களுக்கு கவலையில்லை" என தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் கூறியுள்ளார்.

இதுஒருபுறம் இருக்க, "மாநில அரசின் தேவைகளை சிறப்பாக நிறைவேற்றவே ஆளுநர் ஆய்வு செய்துள்ளார். அமைச்சர்கள், அதிகாரிகள் ஆளுநரின் ஆய்வை ஏற்றுக் கொண்டுள்ளனர். நல்லது நடந்து விடுமோ என்று மற்றவர்கள் பதறுவது ஏன் எனப் புரியவில்லை" என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

"வழக்கமாக தமிழக அரசு செய்து கொடுக்கும் சவுகரியங்களுக்காக இயங்கிய ஆளுநர்களைப் பார்த்தவர்களுக்கு, நேர்மையான ஆளுநரைப்பார்த்தால் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஸ்தம்பித்துப்போயுள்ள தமிழக அரசு இனி இயங்க ஒரு வாய்ப்பு. புரோஹித் வெச்சு (இயங்க) செய்வார்" என நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.

இத்தகைய சூழலில், ஆளுநரின் இந்த ஆலோசனைக் கூட்டம் தலைவர்கள் சொல்வதுபோல் மாநில சுயாட்சிக்கு எதிரானதுதானா?  ஒரு 'பொம்மை அரசை' இங்கே வைத்துக் கொண்டு 'ஆளுநர்' மூலம் மாநிலத்தை நிர்வாகம் செய்திடலாம் என்று ஒருவேளை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு கருதுகிறதோ என்று எழுந்த சந்தேகம் ஆளுநர் ஆய்வு மூலம் இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஸ்டாலின் கூறுவது சரிதானா? இல்லை இதை அரசியலாக்கத் தேவையில்லை என நினைக்கிறீர்களா? விவாதிக்கலாம் வாங்க.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE