Telangana | சாட் ஜிபிடி துணையுடன் அரசு தேர்வில் முறைகேடு - நடந்தது எப்படி?

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் அரசுத் தேர்வில் சாட் ஜிபிடி துணையுடன் முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியை வரம் என்றும் சொல்லலாம், சாபம் என்றும் சொல்லலாம். இந்நிலையில் இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் எப்படி நடந்தது என்பதை பார்ப்போம்.

சாட் ஜிபிடி பயன்பாட்டுக்கு வந்த நாள் முதலே பலரும் அது சார்ந்து தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்திய வண்ணம் உள்ளனர். இந்தச் சூழலில் நாட்டிலேயே முதல் முறையாக அரசுத் தேர்வில் விடை அளிக்க சாட் ஜிபிடி பயன்படுத்தப்பட்டுள்ளது.

தெலங்கானா அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வில் சாட் ஜிபிடி துணையுடன் முறைகேடு நடந்துள்ளது. உதவி செயற்பொறியாளர் மற்றும் கணக்கு அதிகாரிக்கான தேர்வில் இந்த முறைகேடு நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட தேர்வுக்கான வினாத்தாள் கசிந்துள்ளது. அதற்கான விடையை சாட் ஜிபிடி மூலம் பெற்று, அதை ப்ளூடூத் இயர்பட் மூலம் தேர்வர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவினர் பூலா ரமேஷ் எனும் மாநில அரசு பொறியாளரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது. இந்த இரண்டு தேர்வுகளின் போதும் கசிந்த வினாத்தாளை கொண்டு சாட் ஜிபிடி மூலம் பதிலை பெற்று, அதை தேர்வர்களுக்கு அவர் தெரிவித்துள்ளார். தேர்வில் தேர்ச்சி பெற வேண்டி தேர்வு எழுதிய ஒவ்வொருவரும் தலா ரூ.40 லட்சம் வரை அவருக்கு கொடுத்துள்ளதாக தெரிகிறது. இரண்டு தேர்வுகளையும் சேர்த்து அவர் 7 பேருக்கு உதவியுள்ளார்.

சாட் ஜிபிடி? - தொழில்நுட்ப சாதனங்களின் வழியே பயனர்களோடு உரையாடும் தன்மை கொண்ட சாட்பாட் தான் சாட் ஜிபிடி. இதனை ஓபன் ஏஐ எனும் ஆய்வக நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்நிறுவனத்தை கடந்த 2015 வாக்கில் எலான் மஸ்க், சாம் ஆல்ட்மேன் மற்றும் சிலர் இணைந்து தொடங்கினர். இது செயற்கை நுண்ணறிவு பெற்ற பிளாட்பார்ம். இதில் பயனர்கள் கேட்கிற கேள்விகள் அனைத்திற்கும் விடை கிடைக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE