சைபர் குற்றங்களால் பாதித்தோர் செய்ய வேண்டியது என்ன? - டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: "சைபர் குற்றங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். ஒருவேளை இதுபோன்ற சைபர் குற்ற நபர்களிடம் பொதுமக்கள் பணத்தை தவறவிட்டிருந்தால், உடனடியாக 1930 என்கிற எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும்" என்று காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார்.

சென்னையில் காவல் துறை டிஜிபி திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், சைபர் க்ரைம் குற்றங்கள் குறித்தும், அந்த பிரிவுக்கு போதுமான ஆட்கள் உள்ளனரா என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "சைபர் க்ரைம் என்பது எதிர்கால குற்றங்கள் என்பதை பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது நாம் எதிர்பாராத, இதுவரை நாம் சந்திக்காத குற்றங்கள். பல்வேறு வகையில் வந்துகொண்டிருக்கிறது. வெளிநாட்டில் இருப்பவர்கள், உங்கள் செல்போனுக்கு தொடர்பு கொண்டு எளிதில் உங்களது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை திருடிச் சென்றுவிடுவர். தொழிலதிபர்கள் மட்டுமின்றி அரசு ஊழியர்களிடம் அவர்களது உயர் அதிகாரிகள் பேசுவதுபோல் ஏமாற்றி பணத்தைத் திருடியுள்ளனர்.

திருமண வரனுக்காக மேட்ரிமோனியல் தளத்தில் பதிவு செய்துள்ள பெண்களை, வெளிநாடுகளில் இருந்து பேசி வரன் என்ற பெயரில் அவர்களிடமிருந்து பல லட்ச ரூபாய்களை கொள்ளையடித்துள்ளனர். மேலும், தொழில் தொடங்க முனையும் தொழில்முனைவோர்களான இளைஞர்கள், வேலைத்தேடும் இளைஞர்கள், வெளிநாடு செல்ல பாஸ்போர்ட், விசா வாங்கித் தருவதாக கூறியும் பணத்தை திருடும் கும்பல் என பல கும்பல்கள் உள்ளன.

பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். ஒருவேளை இதுபோன்ற நபர்களிடம் மக்கள் பணத்தை தவறவிட்டிருந்தால், உடனடியாக 1930 என்கிற எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும். அவ்வாறு தொடர்பு கொண்டால், சென்னையில் இருக்கும் கட்டுப்பாட்டு அறையின் மூலம், பாதிக்கப்பட்டவர்களின் பணம் வேறொரு வங்கிக்கு பரிமாற்றம் செய்யப்படுவதை தடுத்து, அவர்களது கணக்கிற்குத் திரும்பச் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், இதை 24 மணி நேரத்திற்குள் பொதுமக்கள் செய்தாக வேண்டும்.

தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களிலும் சைபர் க்ரைம் பிரிவு காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. 9 மாநகர காவல் ஆணையரகங்களில் சைபர் குற்றப்பிரிவு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும், தேசிய அளவில் மற்றும் சர்வதேச அளவிலான குற்றங்களைக் கண்டுபிடிப்பதற்கு சிபிசிஐடியிலும் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக மாநில சைபர் கட்டுப்பாட்டு மையம் ஒன்று உள்ளது. அதில் ஒரு ஏடிஜிபி அந்தஸ்து அதிகாரி 24*7 பணியில் இருந்து வருகிறார். சர்வதேச அளவில், இண்டர்நேஷ்னல் போலீஸாரைத் தொடர்பு கொண்டு இழந்த பணத்தை மீட்பதற்கான வாய்ப்பும் இருக்கிறது. எனவே பொதுமக்கள் சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டு, பணத்தை இழக்க நேரிட்டால் உடனடியாக 1930 எண்ணை அழைக்க வேண்டும்.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் சைபர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் மிகப் பெரிய குற்றவாளி கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 26,000 சிம் கார்டுகள், 1200 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் 5 கோடி ரூபாய் மதிப்பிலான குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் 32 லட்சம் ரூபாய் வரை பாதிக்கப்பட்டவர்களுக்குத் திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பொதுமக்கள் காவல் உதவி செயலியை பொதுமக்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனிலும் அதை பதிவிறக்கம் செய்யலாம். அதில் பெண்களுக்கு என்று தனிப்பிரிவு உள்ளது. மேலும் 66 வகையான காவல்துறை செய்ய வேண்டிய பல்வேறு உதவிகள் இந்த செயலியில் உள்ளது. எனவே பொதுமக்கள் இதனை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE