சாத்தூர் அருகே சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்தபோது வெடி விபத்து: ஒருவர் உயிரிழப்பு

By இ.மணிகண்டன்

சாத்தூர்: சாத்தூர் அருகே பட்டாசுக் கடையில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்தபோது இன்று பிற்பகல் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இதில், தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் வைரமுத்து (40). அப்பகுதியில் சொந்தமாக பட்டாசுக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த பட்டாசுக் கடையின் பின்பகுதியில் சட்ட விரோதமாக செட் அமைத்து பட்டாசு தயாரித்தும், அதை பேக்கிங் செய்தும் வந்துள்ளனர். வழக்கம்போல் இன்றும் பட்டாசு கடையின் பின்பகுதியில் பட்டாசு தயாரித்துள்ளனர். அப்போது, மருந்து உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில், பட்டாசுக் கடையிலிருந்த பட்டாசுகள் அனைத்தும் சுமார் ஒரு மணி நேரமாக வெடித்துச் சிதறின. பட்டாசுக் கடையின் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் மற்றும் இரு பைக்குகளும் தீப்பற்றி எரிந்தன.

தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்றனர். ஆனால், தொடர்ந்து பட்டாசு வெடித்துக் கொண்டிருந்ததால் கடையின் அருகே சென்று மீட்புப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு பட்டாசுகள் வெடித்து முடித்த பின்னரே, தீயணைப்பு வீரர்களும், போலீஸாரும் மீட்புப் பணியைத் தொடங்கினர். அப்போது, பட்டாசு அங்கிருந்து தீயில் கருகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று மீட்கப்பட்டது. விசாரணையில் அவர், கோட்டைப்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார் (32) என்பது தெரியவந்தது.

அதையடுத்து, அவரது சடலத்தை பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். மேலும், கடையில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி அணைத்தனர். இந்த விபத்து குறித்து ஏழாயிரம்பண்ணை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE