விழுப்புரம், செங்கல்பட்டு சம்பவம் எதிரொலி: தென் மாவட்டங்களில் போலீஸ் கண்காணிப்பு தீவிரம்

By என். சன்னாசி

மதுரை: விழுப்புரம், செங்கல்பட்டு சம்பவம் எதிரொலியாக மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஏற்கெனவே கள்ளச் சாராய வழக்குகளில் சிக்கிய நபர்களின் செயல்பாடு, நடமாட்டம் குறித்து போலீஸார் தீவிரமாக கண்காணிக்கின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஓரிரு இடத்தில் கள்ளச்சாராயம் குடித்த 18 அப்பாவித் தொழிலாளிகள் உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவையே உலுக்கியுள்ளது. இது தொடர்பாக கள்ளச் சாராயம் காய்ச்சி விற்ற நபர்கள் மீதும், முறையாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க தவறிய காவல் துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் கள்ளச் சாராயம் , போலி மதுபானம் மற்றும் கஞ்சா, போதைப் பொருட்கள் நடமாட்டத்தை தடுக்க மது விலக்கு, உள்ளூர் போலீஸார் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோதிலும், மரக்காணம் சம்பவத்துக்கு பிறகு ஒவ்வொரு மாவட்டத்தில் இது குறித்த கண்காணிப்பை தீவிரத்தப்படுத்த வேண்டும் என காவல் துறையினருக்கு தமிழக காவல் துறை டிஜிபி சைலேசந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்கள் முழுவதும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கள்ளச்சாராயம், போலி மதுபானம், புதுச்சேரியில் வாங்கி வந்து கூடுதல் விலைக்கு மதுபானம் விற்றது, கஞ்சா, போதை பொருட்டுள்ள விற்பனை வழக்குகளில் சிக்கிய நபர்கள் குறித்து விவரங்களை சேகரிக்கப்பட்டுள்ளன. அவர்களின் செயல்பாடுகள், நடமாட்டம் குறித்தும் விசாரிக்கின்றனர்.

இது குறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''விழுப்புரம், செங்கல்பட்டு சம்பவத்தை தொடர்ந்து மதுரை மாவட்டத்திலும் வாடிப்பட்டி, திருமங்கலம், மேலூர், அழகர்கோயில், உசிலம்பட்டி உள்ளிட்ட குறிப்பாக மலை அடிவார பகுதியில் தீவிரமாக கண்காணிக்கிறோம். கரோனா நேரத்தில் மதுபானக் கடைகள் மூடியிருந்தபோது, ஒருசில கிராமங்களில் கள்ளச் சாராயம் காய்ச்சிய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மதுரை மட்டுமின்றி தென் மாவட்ட அளவில் இதுபோன்ற வழக்கில் சிக்கிய நபர்கள் குறித்து தற்போது பட்டியல் சேகரித்து, அவர்கள் தொடர்ந்து காணிக்கப்படுகின்றனர். மது விலக்கு போலீஸார் மட்டுமின்றி அந்தந்த உள்ளூர் காவல் நிலைய போலீஸாரும் தங்களுக்கான காவல் நிலையத்துக்கு உட்பட்ட கிராமங்களில், அதுவும் வெகுதூர கிராமப் பகுதியில் உன்னிப்பாக கவனிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE