விருதுநகர் | ஜாமீன் தொகையை செலுத்தாததால் பாஜக மாவட்டத் தலைவர் மீண்டும் கைது

By இ.மணிகண்டன்

விருதுநகர்: மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த பாஜக மாவட்டத் தலைவர், ஜாமீன் தொகையை செலுத்தாததால் போலீஸாரால் இன்று மீண்டும் கைது செய்யப்பட்டார்.

சிவகாசி மாநகர பாஜக துணைத் தலைவர் பாண்டியன். இவரது மூத்த மகன் கார்த்திக்கிற்கு தூத்துக்குடி கப்பல் துறைமுகத்திலும், 2-வது மகன் முருகதாஸ் என்பவருக்கு ரயில்வேயிலும் வேலை வாங்கித் தருவதாகவும் கூறி, சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல்லைச் சேர்ந்த பாஜக மேற்கு மாவட்டத் தலைவர் சுரேஷ் குமார், மேற்கு மாவட்டச் செயலர் கலையரசன் ஆகியோர் கடந்த 2017-ம் ஆண்டு ரூ.11 லட்சம் பெற்றுள்ளனர்.

சுரேஷ் குமார்

கடந்த 5 வருடமாக வேலையும் வாங்கி தராமல், வாங்கிய பணத்தை திருப்பி தராமல் இருந்ததால் பாண்டியன் இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் புகார் தெரிவித்துள்ளார். அதன் பின்னர், ரூ.2 லட்சத்துக்கு 5 காசோலைகளும், ரூ.1 லட்சத்துக்கு ஒரு காசோலையும் பாண்டியனிடம் சுரேஷ்குமார் கொடுத்துள்ளார்.

பின்னர், ரூ.2 லட்சம் ரொக்க பணம் கொடுத்து ஒரு காசோலையை மட்டும் திரும்ப பெற்றுள்ளார். மீதமுள்ள காசோலைகள் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பியது. மீதி ரூ.9 லட்சத்தை பாண்டியன் திருப்பி கேட்டபோது சுரேஷ்குமாரும் கலையரசனும் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை. இது குறித்து, விருதுநகரில் உள்ள மாவட்ட குற்றப் பிரிவு போலீசில் பாண்டியன் புகார் அளித்தார்.

அதையடுத்து, கடந்த டிசம்பர் 14-ம் தேதி சுரேஷ் குமாரையும், அவரைத் தொடர்ந்து கலையரசனையும் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில், சுரேஷ் குமார் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமீன் கேட்டு மனுக் கொடுத்தார். அதையடுத்து, அவருக்கு ஜாமீன் வழங்கிய மதுரை உயர் நீதிமன்றம் ஜாமீன் தொகையாக ரூ.5.50 லட்சத்தை செலுத்தவும் உத்தரவிட்டது.

ஆனால், அதற்கான காலக்கெடு கடந்த 12-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில், திருத்தங்கலில் இருந்த சுரேஷ் குமாரை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் மீண்டும் இன்று கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE