தி.மலை | கண்ணமங்கலம் அருகே காவலரை தாக்கிய 3 ராணுவ வீர்கள் உட்பட 4 பேர் கைது

By இரா.தினேஷ்குமார்

திருவண்ணாமலை: கண்ணமங்கலம் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலரை தாக்கிய 3 ராணுவ வீரர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராகப் பணியாற்றி வருபவர் அன்பழகன்(32). இவர், குப்பம் கிராமத்தில் மதுவிலக்கு கண்காணிப்புப் பணியில் நேற்று (மே 14-ம் தேதி) மாலை ஈடுபட்டுள்ளார். அப்போது, குப்பம் அரசு பள்ளி அருகே 4 பேர், நிதானம் இழந்து ரகளையில் ஈடுபட்டு, மக்களுக்கு இடையூறு செய்தனர். அவர்களது செயலை கண்டித்த காவலர் அன்பழகன், அனைவரையும் வீட்டுக்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இதனால் இரண்டு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், காவல் அன்பழகனை 4 பேரும் தவறான வார்த்தைகளால் திட்டி தாக்கினர்.

இதையடுத்து 4 பேரையும் பிடித்து நடத்திய விசாரணையில், குப்பம் குளத்து மேட்டு தெருவில் வசிக்கும் ராணுவ வீரர்களான சுப்ரமணி மகன்கள் பழனி (36), முருகன் (28), ஐயப்பன்(25) மற்றும் விவசாயி மணி மகன் சரவணன் (28) என்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து அரசு பணியை செய்யவிடாமல் தடுத்தும், மிரட்டல் விடுத்து தாக்கியதாக கண்ணமங்கலம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து 3 ராணுவ வீரர்கள் உட்பட 4 பேரை கைது செய்தனர். ஸ்ரீநகரில் பணியாற்றும் பழனி, ஐயப்பன் மற்றும் அசாமில் பணியாற்றும் முருகன் ஆகியோர் விடுமுறையில் சொந்த கிராமத்துக்கு வந்துள்ளனர். ராணுவ வீரர்களான சகோதரர்கள் மூவரும் கிராமத்தில் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE