ராமேசுவரத்தில் குடிசை தொழிலான மது விற்பனை - கட்சி பேதமின்றி விற்பதால் பக்தர்கள் வேதனை

By செய்திப்பிரிவு

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் கட்சி பேதமின்றி நூற்றுக்கணக்கானோர் குடிசைத் தொழில் போல கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு மது பாட்டில்களை விற்பதால் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வேதனை அடைந்துள்ளனர்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் எதிரொலியாக, ராமேசுவரத்தில் இயங்கிவந்த 11 மதுக்கடைகளில் 8 கடைகள் மூடப்பட்டு, பாம்பனில் மட்டும் 3 மதுக்கடைகள் செயல்படுகின்றன.

பக்தர்கள் அதிகளவில் வரும் ராமேசுவரம் தீவிலிருந்து மதுக் கடைகளை முற்றிலும் அகற்றி விட்டு, கலாம் பிறந்த ராமேசுவரத்தை மது இல்லாத தீவாக மாற்ற வேண்டும் என்று கோரி பொது மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். மேலும் கிராமசபைக் கூட்டத்திலும் பாம்பனில் இயங்கி வரும் 3 மதுக்கடைகளையும் அகற்ற வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், பாம்பன் மதுக்கடைகளிலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் இயங்கும் மற்ற மதுக்கடைகளில் இருந்தும் மொத்தமாக சிலர் மது பாட்டில்களை வாங்கிவந்து ராமேசுவரம், தங்கச்சிமடம், தனுஷ்கோடி பகுதியில் கூடுதல் விலைக்கு சட்ட விரோதமாக விற்பனை செய்வது அதிகரித்துள்ளது.

ஒரு மது பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.50 முதல் ரூ.100 வரை விலை வைத்து விற்கின்றனர். இதனை ஆளும் கட்சி, எதிர்க்கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கட்சி பேதமின்றி குடிசைத் தொழில் போல கடைகள், ஹோட்டல்கள் என பல்வேறு இடங்களிலும் விற்பது அதிகரித்துள்ளது.

இதனால், அதிகாலை முதல் நள்ளிரவு வரை எந்த நேரத்திலும் ராமேசுவரம் பகுதியில் மதுபாட்டில்கள் தங்கு தடையில்லாமல் கிடைத்து வருகின்றன. இளைஞர்கள், மீனவர்கள் கூடுதல் விலை கொடுத்து மது அருந்தி வருவதால் அவர்களை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான குடும்பத்தினரின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.

குறிப்பாக ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரை மற்றும் ராமநாதசுவாமி கோயில் அருகே கள்ளச் சந்தையில் மது விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இங்கு மது அருந்துவோர் கோயிலுக்கு வரும் பக்தர்களிடமும், சுற்றுலா பயணிகளிடமும் தகராறில் ஈடுபடுகின்றனர்.

ராமேசுவரம் தீவில் மதுபான விற்பனையை முற்றிலுமாக தடுத்து, மீனவர்கள், இளைஞர்களின் வாழ்க்கையை பாதுகாக்க போலீஸார், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட மதுவிலக்குப்பிரிவு போலீ ஸார் கூறியதாவது: மாவட்டத்தில் சில மதுக்கடைகளில் பெட்டி, பெட்டியாக மொத்தமாக மது விற்பது தெரிய வந்துள்ளது. அவர்களை கண்காணித்து வருகிறோம். விரைவில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அரசு மதுக்கடைகளில் மொத்தமாக மது பாட்டில்களை வாங்கி தனியாக கடைகளிலோ அல்லது வீடுகளிலோ விற்பவர்களை கைதுசெய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க பொதுமக்கள் மது விலக்கு காவல் கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா சேவை 10581 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE