சென்னை | ஆன்மாக்களுடன் பேச வைப்பதாகக் கூறி ரூ.2 கோடி பறித்த கேரள மந்திரவாதி கைது

By செய்திப்பிரிவு

சென்னை: ஆன்மாக்களுடன் பேச வைப்பதாகக் கூறி ஐ.டி ஊழியரிடம் நூதனமுறையில் ரூ.2 கோடி பறித்ததாக கேரள மந்திரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை புரசைவாக்கம், ஆண்டர்சன் சாலை பகுதியைச் சேர்ந்தவர் கவுதம் சிவசாமி(51). ஐ.டி நிறுவன ஊழியரான இவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் மனுவை அளித்தார்.

அதில், அவர் கூறியிருந்ததாவது: 2005-ம் ஆண்டு நைஜீரியா நாட்டில் உள்ள ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணி செய்தேன். என்னுடன்கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சுப்ரமணி (52) என்பவரும் பணி செய்தார்.

அப்போது, எங்களுக்குள் அறிமுகம் ஏற்பட்டது. தற்போது நான் சென்னையில் வசிக்கிறேன். நான் மிகுந்த கடவுள்நம்பிக்கை உடையவன் என்பதைத் தெரிந்துகொண்ட சுப்ரமணி, என்னை பல்வேறு கோயில்களுக்கு அழைத்துச் சென்றார்.

மேலும், இறந்துபோன என் அம்மா, புட்டபர்த்தி சாய்பாபா ஆன்மாக்களுடன் என்னை பேச வைப்பதாகக் கூறினார். என் வீட்டின் பூஜையறையில் உள்ள சுவாமி படத்திலிருந்து விபூதியை விழச் செய்தும், எலுமிச்சம்பழம் வரவழைத்தும், மந்திர மாயாஜால வித்தைகள் செய்தும் என்னை மெஸ்மரிசம் செய்தார்.

இறந்துபோன என் தாய், அவரது கனவில் வந்து, பணம் வாங்கிக் கொள்ளச் சொன்னதாக கூறி என்னிடமிருந்து 2015-ம் ஆண்டு முதல் 2018 வரையிலான காலத்தில் வங்கி பரிவர்த்தணை மற்றும் ரொக்கமாக என ரூ.2 கோடிக்கு மேல் பணத்தை பெற்றுக்கொண்டார்.

இதற்கிடையே, அவரது மோசடி வேலைகள் எனக்கு தெரியவந்து. கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டேன். ஆனால், பணத்தை திருப்பித்தர மறுத்ததோடு, என்னை மிரட்டவும் செய்தார். எனவே அவர் மீதுநடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இதுகுறித்து உரிய விசாரணை நடத்த காவல் ஆணையர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டார். அதன்படி, துணை ஆணையர் மீனா,உதவி ஆணையர் ஜான் விக்டர்தலைமையிலான தனிப்படை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், மோசடி நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து கேரளாவில் தலைமறைவாக இருந்த சுப்ரமணியை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை அழைத்து வந்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE