தருமபுரி அருகே சட்டவிரோதமாக மின்வேலி அமைத்தவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

By எஸ்.ராஜா செல்லம்

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பாலக்கோடு வட்டம் கும்மனூர் அடுத்த சூடனூர் கிராமத்தைச் சேர்ந்த முனிராஜ் மகன் நவீன்(30). கட்டிட மேஸ்திரியான இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த சட்ட விரோதமாக மின்வேலி அமைத்துள்ளார். இன்று (வியாழன்) அதிகாலை வயல் பகுதிக்கு சென்ற நவீன் எதிர்பாராத விதமாக மின்வேலியில் சிக்கியுள்ளார்.

இதில், உடலில் மின்சாரம் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த பஞ்சப்பள்ளி போலீஸார் உயிரிழந்த நவீனின் உடலை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கடந்த மாதம் மாரண்ட அள்ளி அருகே, இவ்வாறு அமைக்கப்பட்டிருந்த சட்ட விரோத மின்வேலியில் சிக்கி 3 யானைகள் உயிரிழந்தன. அதன் பின்னர், சட்ட விரோத மின்வேலி அமைப்பது தொடர்பாக வனத்துறை, மின்வாரியம் மற்றும் காவல்துறை இணைந்து வனத்தை ஒட்டிய கிராமப் பகுதிகளில் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அதேபோல, விளைநிலங்களில் திடீர் ஆய்வுகளும் நடத்தி வருகின்றனர்.

ஆனாலும், விலங்குகள் விளை நிலங்களில் நுழைவதைத் தடுக்க விவசாயிகள் சிலர் விபரீதம் உணராமல் தற்போதும் விளை நிலங்களைச் சுற்றி இரவில் சட்ட விரோத மின்வேலிகளை அமைத்து வருகின்றனர். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE