கும்பகோணம் | ரயில் நிலையத்தில் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 10 கிலோ கஞ்சா பறிமுதல்

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: கும்பகோணத்திற்கு பனாராஸிலிருந்து வந்த ரயிலில் ரூ. இரண்டரை லட்சம் மதிப்புள்ள 10 கிலோ கஞ்சா பொட்டலங்களைக் கும்பகோணம் ரயில்வே போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தமிழகம் முழுவதும் 4.0 உத்தரவின் படி கஞ்சா மற்றும் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் படி கடந்த 7-ம் தேதி பனராஸிலிருந்து புறப்பட்டு ராமேஸ்வரம் நோக்கி வந்த ரயில், கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு வந்த போது, அந்த ரயிலின் முன்பதிவில்லாத பெட்டியின் கழிவறை அருகில் ரூ. இரண்டரை லட்சம் மதிப்புள்ள 10 கிலோ எடையுள்ள 3 பெரிய அளவிலான கஞ்சா பொட்டலங்கள் இருந்தன.

இதனையடுத்து அங்கு நின்றிருந்தவர்களை , கும்பகோணம் ரயில்வே இருப்புப் பாதை தனிப்பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்ட போது, யாருக்கும் தெரியாது எனக் கூறியதால், அந்த 3 பொட்டலங்களை கும்பகோணம் ரயில்வே இருப்புப் பாதை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

பின்னர், அந்த பொட்டலங்கள் நாகப்பட்டிணம் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE