பெங்களூருவில் பதுங்கி இருந்தபோது சென்னை ரவுடிகள் இருவர் துப்பாக்கி முனையில் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர்கள் யுவராஜ் என்கிற எலி யுவராஜ் (38), ஈஷா என்கிற ஈஸ்வரன்(33). ரவுடிகளாக வலம் வந்த இவர்கள் மீது கொலை, போதைப் பொருள் கடத்தல், ஆயுதக் கடத்தல் உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. வட சென்னையில் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பு, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் உள்ள ஷெட்டுகளில் மாமுல் வசூலிப்பது உள்ளிட்ட குற்றச் செயல்களிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

கடந்த 2017-ம் ஆண்டு திருப்போரூரில் வழக்கறிஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் ஈஷா, யுவராஜ் ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த இருவரும் வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டனர். இதையடுத்து இருவரையும் தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வந்தனர்.

அவர்கள் எங்குப் பதுங்கி இருக்கிறார்கள் என்று போலீஸாருக்கு தெரியாமல் இருந்தது.எனவே வட சென்னை இணை ஆணையர் ரம்யா பாரதி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடப்பட்டது. இந்நிலையில் ஈஷா, யுவராஜ் ஆகிய இருவரும் பெங்களூருவில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து உதவி ஆய்வாளர் விஜய் தலைமையில் தனிப்படை போலீஸார் பெங்களூருவுக்கு சென்றனர்.

நேற்று அதிகாலை ரவுடிகள் பதுங்கியிருந்தஇடத்தை போலீஸார் கண்டறிந்து சுற்றி வளைத்தனர். இதையறிந்த ஈஷா, யுவராஜ் இருவரும்போலீஸ் பிடியிலிருந்து நழுவ முயன்றனர்.இருப்பினும் அவர்களை துப்பாக்கி முனையில் போலீஸார் கைது செய்தனர். முன்னதாக தப்பி ஓட முயன்றபோது இருவரது காலிலும் முறிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ``கைதான ஈஷாவும், யுவராஜும் பெங்களூருவில் பதுங்கி இருந்தபடியே சென்னையில் உள்ள தொழிலதிபர்களை சாட்டிலைட் போன்மூலம் தொடர்பு கொண்டு மிரட்டி பணம் வாங்குவது, கொலை திட்டம் தீட்டுவது உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களை சென்னையில் உள்ள தங்களது கூட்டாளிகள் மூலம் அரங்கேற்றி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது'' என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE