செஞ்சி அருகே நூறு நாள் வேலையின்போது இளம்பெண் சடலம் கண்டெடுப்பு

By செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி: செஞ்சி அருகே நூறு நாள் வேலை செய்து கொண்டிருக்கும்போது பள்ளத்தில் இளம்பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சாலவனூர் கிராமத்தில் நேற்று முன்தினம் புறம்போக்கு நிலத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் அக்கிராம மக்கள்பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பள்ளம் தோண்டும்போது மனித உடலின் கை தெரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் அங்கிருந்த பணித்தள பொறுப்பாளரிடம் இதுபற்றி கூறினர். இதையடுத்து பணித்தள பொறுப்பாளர் சாலவனூர் கிராம நிர்வாக அலுவலருக்கும், வஞ்சனூர் போலீஸாருக்கும் தகவல் கொடுத்தார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார், கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் பொதுமக்கள் உதவியுடன் பள்ளத் தில் இருந்த மண்ணை அப்புறப் படுத்தினர். அப்போது 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணின் உடல் புதைக்கப்பட்டு இருப்பதை கண்டனர். தகவலறிந்த விழுப்புரம் எஸ்பி ஸ்ரீநாதா, செஞ்சி டிஎஸ்பி கவினா ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

இந்நிலையில் நேற்று காலை விழுப்புரம் தடயவியல் நிபுணர் சண்முகம் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சாலவனூர் கிராமத்திற்குச் சென்று இளம் பெண் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக டிஎஸ்பி கவினா கூறுகையில், “இளம்பெண் சடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. பாலியல் வன்புணர்வு செய்து கொன்று புதைத்தார்களா என்பது தெரியவரும். அப்பெண் யார் என்பதை அறிய 25 முதல் 30 வயது வரையில் காணாமல் போன இளம்பெண்கள் குறித்த விவரங்களை மற்ற காவல் நிலையங்களில் இருந்து பெறும் பணி நடந்து வருகிறது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE