நஞ்சை புகழூர் காவிரி ஆற்றில் கதவணை கட்டுமானப் பணி: செயின் டோசர் வாகனம் கவிழ்ந்து நீரில் மூழ்கி ஓட்டுநர் உயிரிழப்பு

By ஜி.ராதாகிருஷ்ணன்

கரூர்: கரூர் மாவட்டம் நஞ்சை புகழூர் காவிரி ஆற்றில் கதவணை கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த செயின் டோசர் வாகனம் கவிழ்ந்து நீரில் மூழ்கியதில் ஓட்டுநர் ராஜேஷ் மூச்சுத் திணறி உயிரிழந்தார். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து ராஜேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டம் நஞ்சை புகழூர் காவிரி ஆற்றில் புதிய கதவணை கட்டும் பணி நடந்து வருகிறது. ஆற்றில் வரும் தண்ணீரை திருப்பி விடும் வகையில் 3 செயின் டோசர் (ஹிட்டாச்சி) வாகனங்கள் ஆற்றில் ஒரு ஓரத்தில் தண்ணீர் செல்லும் வகையில் பள்ளம் பறித்து பள்ளத்தில் எடுக்கும் மணலை கரைப்போல போடும் பணியில் இன்று (மே 2) ஈடுபட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகேயுள்ள பொத்தனூரை சேர்ந்தவர் ராஜேஷ் (35) ஓட்டுநர் உள்ளிட்ட 3 பேர் மேற்கண்ட பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சுமார் காலை 10.45 மணியளவில் ராஜேஷ் இயக்கிய செயின் டோசர் வாகனம் மேட்டில் இருந்து சரிந்து தண்ணீர் நிரம்பிய ஆற்றின் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் வாகனத்துடன் ராஜேஷ் தண்ணீரில் மூழ்கினார்.

உயிரிழந்த ராஜேஷ்.

மூழ்கிய செயின்டோசரை மற்ற இரு செயின்டோசர் வாகனங்கள் மூலம் மீட்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். வாகனத்தை மீட்ட நிலையில் ஏசி கேபினுக்குள் சிக்கியிருந்த ராஜேஷை கேபின் கண்ணாடியை உடைத்து மீட்டனர். அவரை பரிசோதித்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ பணியாளர் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE