ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தப்பட்ட சம்பவம்: கிருஷ்ணகிரியில் 4 பேர் கைது

By செய்திப்பிரிவு

கோவை: ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தப்பட்ட சம்பவத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்தவர் சஞ்சீவி (42). பெங்களூரூவில் தங்கி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். குடும்பத்தினர் சென்னையில் வசித்து வருகின்றனர்.

கடந்த 8-ம் தேதி நிலம் வாங்குவதற்காக கிருஷ்ணகிரிக்கு சென்று ஓட்டலில் தங்கியுள்ளார். 10-ம் தேதி அறைக்குள் நுழைந்த 7 பேர், தங்களை மதுரை மற்றும் கேரள போலீஸார் என்று அறிமுகப்படுத்தி. புகாரின்பேரில் விசாரிக்க வேண்டும் என கூறி அவரது காரில் கரூர், நாமக்கல் சென்ற பின் கோவைக்கு அழைத்து சென்றனர்.

காந்திபுரத்தில் அறை எடுத்து தங்கியிருந்த நிலையில் சஞ்சீவியிடம் ரூ.30 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவர் அணிந்திருந்த தங்க செயின், பிரேஸ்லெட், மோதிரம் உட்பட 30 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை மிரட்டி பறித்தனர். பின்னர் அந்த கும்பல் சஞ்சீவியை காரில் அழைத்துச் சென்று சேலம் புறவழிச்சாலையில் உள்ள சுங்கச்சாவடி அருகே இறக்கிவிட்டு சென்றனர்.

இதுபற்றி கோவை, காட்டூர் காவல் நிலையத்தில் சஞ்சீவி அளித்த புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீஸார் கேரளாவை சேர்ந்த சிபின், கிப்சன், சமீர் முகமது மற்றும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த குமார் என்ற மீன் சுருட்டிகுமார்(42) ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தங்க நகைகளை மீட்டனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய மற்ற 6 பேரை தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE