திருச்சுழியில் டாஸ்மாக் ஊழியர்களைத் தாக்கி ரூ.5.37 லட்சம் கொள்ளை

By இ.மணிகண்டன்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் டாஸ்மாக் கடை ஊழியர்களைத் தாக்கிய முகமூடிக் கொள்ளையர்கள் ரூ.5.37 லட்சத்தை நேற்று நள்ளிரவு கொள்ளைடித்துச் சென்றனர்.

திருச்சுழி குண்டாறு அருகே டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இங்கு, புளியங்குளத்தைச் சேர்ந்த செந்தில் (43), பச்சேரியைச் சேர்ந்த மாரியப்பன் (49) ஆகியோர் மேற்பார்வையாளர்களாகவும், பள்ளிமடத்தை சேர்ந்த பூமிநாதன் (49), பச்சேரியைச் சேர்ந்த முத்துக்கருப்பன் (45), நார்த்தம்பட்டியைச் சேர்ந்த நாராயணசாமி (48), பனையூரைச் சேர்ந்த பெருமாள்ராஜ் (46) ஆகியோர் விற்பனையாளர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.

பண்டிகை காலம் என்பதால் கடந்த இரு நாள்களாக டாஸ்மாக் கடையில் கூட்டம் அலைமோதியது. இதை நோட்டமிட்ட மர்ம கும்பல், டாஸ்மாக் கடை அருகே உள்ள காட்டுப் பகுதியில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்து கண்காணித்துள்ளது. நேற்று நள்ளிரவு டாஸ்மாக் கடையில் விற்பனை முடிந்து, கணக்குகளை சரிபார்த்துக்கொண்டிருந்தபோது, அரிவால், வாள் போன்ற ஆயுதங்களுடன் முகமூடி அணிந்த 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று திடீரென டாஸ்மாக் கடைக்குள் புகுந்து அங்கிருந்த ஊழியர்களை சரமாரியாகத் தாக்கியது.

முகமூடி கும்பலைத் தடுக்க முயன்ற விற்பனையாளர் பூமிநாதனுக்கு வெட்டு விழுந்தது. நிலை தடுமாறி அவர் கீழே விழுந்தார். மற்ற ஊழியர்கள் கடையை மூட முயன்றபோது மது பாட்டில்களால் அவர்களை முகமூடி கும்பல் தாக்கியுள்ளது. பின்னர், டாஸ்மாக் கடையிலிருந்த ரூ.5.37 லட்சத்தை முகமூடி கும்பல் கொள்ளையடித்துக்கொண்டு தப்பிச்சென்றது. ஏராளமான மது பாட்டில்களும் இந்த மேதலில் உடைந்து சேதமடைந்தன.

இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் திருச்சுழி போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் காயமடைந்த டாஸ்மாக் ஊழியர்கள் 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்சுழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசபெருமாள் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும், இக்கொள்ளைச் சம்பவம் குறித்து திருச்சுழி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE