விருதுநகர் மருத்துவமனையில் இரு கைதிகளை வெட்டிய கும்பலைப் பிடிக்க 4 தனிப் படைகள் அமைப்பு

By இ.மணிகண்டன்

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனைக்குள் நுழைந்து மிளகாய்பொடி தூவி கைதிகளை வெட்டிவிட்டுத் தப்பிய கும்பலைப் பிடிக்க 4 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப் படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திண்டுக்கலில் கடந்த மாதம் சின்னத்தம்பி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட திண்டுக்கல் மாவட்டம் வேடபட்டியைச் சேர்ந்த யுவராஜ்குமார் (29), திண்டுக்கல் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த விக்னேஷ் (29) ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, விருதுநகரில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். சம்பவத்தின்போது இவர்கள் இருவருக்கும் கையில் வெட்டுக் காயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக யுவராஜ் குமாரும் விக்னேஷும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையறிந்த, கொலையான சின்னத்தம்பியின் கூட்டாளிகள் நேற்று இரவு விருதுநகர் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து அங்கு, தூப்பாக்கியுடன் காவலுக்கு இருந்த காவலர்கள் சிலம்பரசன், அழகுராஜ் ஆகியோர் மீதும், சிகிச்சையிலிருந்த யுவராஜ்குமார், விக்னேஷ் மீதும் மிளகாய் பொடியைத் தூவி, யுவராஜ்குமாரையும் விக்னேஷையும் அரிவாளால் வெட்டியுள்ளனர். தடுக்க முயன்ற போலீஸாரையும் அந்த கும்பல் தாக்கி விட்டு தப்பியோடியது. இச்சம்பவம் விருதுநகர் அரசு மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து, திண்டுக்கலைச் சேர்ந்த போத்தி ராஜன், நட்டுராயன், அருண், விஜி, ராமச்சந்திரன், சோனையன் மற்றும் அடையாளம் தெரியாத மற்றொரு நபர் என 7 பேர் மீது விருதுநகர் கிழக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், தப்பியோடிய நபர்களைப் பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசபெருமாள் உத்தரவின்பேரில், விருதுநகர் பாண்டியன் நகர் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, திருத்தங்கல் இன்ஸ்பெக்டர் நவநீத கிருஷ்ணன், வச்சக்காரப்பட்டி இன்ஸ்பெக்டர் ராமராஜ், கிருஷ்ணன்கோவில் இன்ஸ்பெக்டர் முத்துச்சாமி ஆகியோர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து திண்டுக்கல், கமுதி உள்ளிட்ட இடங்களில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், மருத்துவமனையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் உள்ள பதிவுகளையும் போலீஸார் தீவிரமாக சேகரித்து வருகின்றனர். அதோடு, தேடப்பட்டு வரும் நபர்கள் நீதிமன்றங்களில் சரணடைய வாய்ப்பு உள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர், ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி நீதிமன்றங்களிலும் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE