ரயில்வே தட்கல் டிக்கெட் முன் பதிவு செய்ய 11 ஆண்டுகளாக போலி மென்பொருள் தயாரித்து விற்றவர் கைது

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: ரயில்வே தட்கல் டிக்கெட் பதிவு செய்ய போலி மென்பொருள் தயாரித்து 11 ஆண்டுகளாக விற்பனை செய்த உத்தர பிரதேச இளைஞரை, மும்பையில் சுற்றி வளைத்து திருவண்ணாமலை ரயில்வே காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

வேலூர் பகுதியில் சட்ட விரோதமாக ரயில்வே தட்கல் டிக்கெட் விற்பனை செய்ததாக 5 தனியார் முன் பதிவு மையங்கள் மீது திருவண்ணாமலை ரயில்வே காவல் துறையினர் கடந்த ஆண்டில் 5 வழக்குகளை பதிவு செய்தனர். இந்த வழக்கில், போலி மென்பொருள் விநியோகஸ்தரான பிஹார் மாநிலம் தனபூர் பகுதியில் வசிக்கும் சைலேஷ் யாதவ்(27) என்பவர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.

போலி மென்பொருளை தயாரித்து விற்பனை செய்வதில் மூளையாக செயல்பட்ட, உத்தர பிரதேச மாநிலம் கோல்ஹுயிகரிப்பைச் சேர்ந்த ஷம்ஷேர் ஆலம் நிசார் அகமது(40) என்பவரை பிடிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவினர், மும்பையில் டிட்டிவாலா பகுதியில் தங்கியிருந்து கண்காணித்து ஷம்ஷேர் ஆலம் நிசார் அகமதுவை கடந்த 10-ம் தேதி சுற்றிவளைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு லேப்டாப், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

இதுகுறித்து ரயில்வே காவல் ஆய்வாளர் அருண்குமார் நேற்று கூறும்போது, “ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ இணையத்தில் ஊடுருவி தட்கல், பிரிமீயம் தட்கல் மற்றும் முன்பதிவு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஒரு போலி மென்பொருள் விலை ரூ.500.

இது அட்மின், பிரதான அட்மின், மினி அட்மின், சூப்பர் விநியோகஸ்தர் மற்றும் விநியோகஸ்தர் என அடுத்தடுத்து நிலையில் உள்ளவர்கள் மூலமாக தனியார் முன்பதிவு மையங்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. போலி மென்பொருள் தயாரித்து விற்பனை செய்யும் பணியை ஷம்ஷேர் ஆலம் நிசார் அகமது 2012-ம் ஆண்டு முதல் செய்து வந்துள்ளார். இவர் தயாரித்துள்ள அனைத்து போலி மென்பொருளும் அழிக்கப்படும்” என்றார்.

ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள சைலேஷ் யாதவ், 3,485 போலி மென்பொருளை தலா ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை செய்துள்ளார். இதில் அவருக்கு 30 சதவீதம் கமிஷன் கிடைத்துள்ளது.

ஒரு நாளைக்கு 7 ஆயிரம் தட்கல் டிக்கெட் என 18 மாதங்களில் 1,25,460 தட்கல் டிக்கெட்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.56 கோடியே 45 லட்சத்து 70 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE