இணைய மோசடியில் ரூ.31 லட்சத்தை இழந்த புதுச்சேரி பொறியாளர் - சைபர் கிரைம் விசாரணை

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: இன்ஸ்டாகிராமில் வந்த லிங்க்கில் சினிமா ரேட்டிங் தந்தால் உடன் பணம் கிடைக்கும் என ஆசையைத் தூண்டி, ஆன்லைன் லிங்கில் நுழைந்ததால் ரூ.31 லட்சத்தை புதுச்சேரி பொறியாளர் இழந்துள்ளார்.

புதுச்சேரி கூடப்பாக்கத்தைச் சேர்ந்த பொறியாளர் அருண் பாண்டியன். இவர் தன்னுடைய செல்போனில் இன்ஸ்டாகிராமில் வந்த ஒரு லிங்கை உள் சென்று பார்த்துள்ளார். அதில் ஆன்லைனில் வருகின்ற சினிமாக்களை பார்த்து இந்த படத்தைப் பற்றிய உங்களுடைய மதிப்பெண்ணை (RATING)அதில் நீங்கள் குறிப்பிட்டால் நீங்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு உடனடியாக பத்து சதவீதம் வருமானம் கிடைக்கும் என்று அறிவிப்பு இருந்தது.

இந்த அறிவிப்பை நம்பி இன்ஸ்டாகிராம் லிங்க் உள்ளே சென்று ஒரு படத்தை பார்த்து அதற்கான மதிப்பெண் கொடுத்தவுடன் அருண் பாண்டியன் முதலீடு செய்த பத்தாயிரம் ரூபாய்க்கு 10% உடனடியாக பணம் 11ஆயிரம் ரூபாய் அனுப்பி உள்ளார்கள். அதை நம்பி ரூ.31 லட்சத்தை முதலீடு செய்து பல்வேறு படங்களை பார்த்து இவர் அதற்கான மதிப்பெண்ணை கொடுத்துக் கொண்டே இருந்தார்.

ஆனால் பணம் வரவில்லை. மேலும் 31 லட்சம் ரூபாய் வரை அதில் முதலீடு செய்துவிட்டு பணத்தை திரும்ப எடுக்க முயற்சித்த போது அவருடைய வங்கி கணக்கில் பணம் எதுவும் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து இணையவழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அருண் பாண்டியன் அளித்த புகாரின் பேரில், ஆய்வாளர் கீர்த்தி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இது தொடர்பாக இணையவழி குற்றப்பிரிவு போலீஸார் கூறுகையில், "மொபைல் போனில் எஸ்எம்எஸ் அல்லது வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்றவற்றில் வருகின்ற லிங்கில் உள்ளே சென்று பார்க்க வேண்டாம். அப்படி அந்த லிங்க் மூலமாக நீங்கள் உள்ளே செல்லும் பொழுது உங்களுடைய செல்போன் ஹேக் செய்யப்படுகிறது.

உங்கள் செல்போனில் இருக்கின்ற அனைத்து தகவல்களும் இணைய வழி மோசடிக்காரர்களால் திருடப்பட்டுவிடும். மேலும், கவர்ச்சிகரமான அதிக சம்பளத்துடன் கூடிய வெளிநாட்டு வேலை வாய்ப்பு அறிவிப்புகள், நாங்கள் சொல்வதில் முதலீடு செய்தால் அன்றைய தினமே பத்து சதவீதம் லாபம் கொடுக்கப்படும் எனும் அறிவிப்பு, மல்டி லெவல் மார்க்கெட்டிங் போன்றவை மூலம் மோசடிகள் நடக்கின்றன. எனவே, பொதுமக்கள் இது போன்ற மோசடிக்காரர்களை நம்பி பணத்தை இழக்க வேண்டாம்" என போலீஸார் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE