சென்னை | கிப்ட் கார்டு அனுப்பி பணமோசடி: விழிப்புடன் இருக்க போலீஸார் அறிவுரை

By செய்திப்பிரிவு

சென்னை: சைபர் க்ரைம் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் நாள் தோறும் பலவகையான யுக்திகளை கையாண்டு மக்களை ஏமாற்றி பணம் பறித்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது, அமேசான் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தின் 9-வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி ‘லக்கி டிரா’ பரிசு போட்டி நடத்தப்பட்டு, அதில் வெற்றியாளராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள் என கடிதம் ஒன்று வீடுகளுக்கு அனுப்பப்படுகிறது.

அமேசான் நிறுவனத்தின் லோகோ பதிக்கப்பட்டுள்ள அக்கடிதத்தில், ஸ்மார்ட் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஸ்மார்ட் போன், லேப்டாப் உள்ளிட்டவை பரிசுகளாக குறிப்பிடப்பட்டிருக்கும். அத்துடன் கூடுதலாக கூப்பன் ஒன்றும் இணைக்கப்பட்டிருக்கும். அதை ஸ்க்ராட்ச் செய்து அதில் உள்ள குறியீட்டு எண்ணை கடிதத்தில் குறிப்பிட்டுள்ள உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும்.

அப்போது பொது மக்களிடம், குற்றவாளிகள் விலை மதிப்புள்ள பரிசுகள் அவர்களது பெயரில் விழுந்திருப்பதாகவும், பரிசை பெற ஜிஎஸ்டி வரிகளை முதலில் கட்ட வேண்டும் எனவும் கூறி பணம் அனுப்பச் சொல்லி ஏமாற்றுவர். ஆனால் பரிசோ, பணமோ பொது மக்களுக்கு வந்து சேராது.

எனவே பொது மக்கள் பெரிய நிறுவனங்களில் இருந்து பரிசு விழுந்திருப்பதாக கடிதமோ, இ-மெயிலோ வந்தாலோ, செல்போன் அல்லது வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டு பேசினாலும் அதை நம்பி பணம் அனுப்ப வேண்டாம். இது போன்ற மோசடி செயல்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் இருக்குமாறு சைபர் க்ரைம் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE