அதிமுக முன்னாள் எம்எல்ஏவின் 10 ஏக்கர் நிலத்தை போலி பத்திரப் பதிவுடன் மோசடி செய்ததாக சார் பதிவாளர் உட்பட 5 பேர் மீது வழக்கு

By அ.கோபால கிருஷ்ணன்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குன்னூரில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சாத்தையாவுக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை போலி பத்திரப் பதிவு செய்து மோசடி செய்த சார் பதிவாளர், பத்திர எழுத்தர் மற்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், மகன் உள்ளிட்ட 5 பேர் மீது நத்தம்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜபாளையத்தை சேர்ந்தவர் சாத்தையா (76). இவரது மனைவி வசந்தமாலா. சாத்தையா கடந்த 1991-1996 ல் ராஜபாளையம் தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருந்தார். இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கிருஷ்ணன்கோவில் அருகே வெள்ளப்பொட்டல் கிராமத்தில் 10.23 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார். அதன்பின் சாத்தையா தனது குடும்பத்துடன் சென்னையில் குடியேறிவிட்டார்.

இந்நிலையில், இரு நாட்களுக்கு முன் அப்பகுதியை சேர்ந்த சிலர் சாத்தையாவுக்கு போன் செய்து உங்களது இடத்தில் சிலர் பணி செய்து வருவதாக கூறியுள்ளனர். இதையடுத்து சாத்தையா வெள்ளப்பொட்டல் கிராமத்தில் வந்து பார்த்தபோது, திருமங்கலத்தை சேர்ந்த முருகன் என்பவரது பெயரில் நிலம் மாற்றப்பட்டுள்ளது தெரியவந்தது.

இதுகுறித்து பத்திரப் பதிவு அலுவலகத்தில் விசாரித்தபோது, மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த ராஜமுனியாண்டி(75), அவரது மனைவி முத்துலட்சுமி (72) ஆகியோர் குன்னூர் பத்திரப் பதிவு அலுவலகத்தில் தாங்கள்தான் சாத்தையா, வசந்தமாலா என்று போலி ஆவணங்களை தயார் செய்து 10.23 ஏக்கர் நிலத்தை தனது மகன் முருகன் என்பவருக்கு போலியாக பத்திரப் பதிவு செய்துள்ளது தெரியவந்தது.

இதுகுறித்து சாத்தையா அளித்த புகாரில் முருகன் அவரது தந்தை ராஜமுனியாண்டி, தாய் முத்துலட்சுமி மற்றும் போலி பத்திரப் பதிவிற்கு உடந்தையாக இருந்த சார் பதிவாளர் சார்லஸ்பிரபு, பத்திர எழுத்தர் மாரியப்பன் ஆகிய 5 பேர் மீது குற்றச் சதியில் ஈடுபடுதல், போலி ஆவணம் தயாரித்தல், மோசடி செய்தல், போலி ஆவணத்தை உண்மையாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நத்தம்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE