சென்னையில் 2 மாதங்களில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 8,000 பேரிடம் ரூ.8 கோடி அபராதம் வசூல்

By செய்திப்பிரிவு

சென்னை: கடந்த இரண்டு மாதங்களில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 8 ஆயிரம் பேரிடம் இருந்து ரூ.8 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டு உள்ளதாக சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை பெருநகர காவல் துறை விபத்தை குறைக்கும் வண்ணம் மோட்டர் வாகனச் சட்டத்தை திறம்பட அமலாக்கம் செய்து சாலை போக்குவரத்து விபத்துகளைக் குறைத்து வருகிறது. சாலை விபத்துக்களில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று குடிபோதையில் வாகனம் ஓட்டுவதாகும். எனவே குடிபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு சட்டத்தில் கடுமையான தடுப்பு நடவடிக்கையாக தண்டனை வழங்கப்படுகிறது.

அபராதத் தொகை 10 ஆயிரம் அதிகமாக இருப்பதால் பலர் அபராதத்தைச் செலுத்துவதில்லை, ஆனால் நீதிமன்றத்தில் உள்ள மெய் நிகர் பிரிவிலிருந்து அவர்களின் தொலைபேசி எண்களுக்கு அழைப்புவந்தாலும் அபாரதம் செலுத்துவதில்லை. இவ்வாறு 7,943 குடிபோதை வழக்குகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன. எனவே இது போன்ற விதிமீறுபவர்களுக்கு நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து சென்னை பெருநகரில் 10 இடங்களில் அமைந்துள்ள அழைப்பு மையங்கள் (Call centers) மூலம் தகவல் தெரிவித்து, கடந்த 01.04.2023 அன்று அவர்களை நேரில் வரவழைத்து வழக்குகளை முடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சிறப்பு நடவடிக்கையின் மூலம் 727 வழக்குகள் தீர்வுகாணப்பட்டு அபராதத் தொகையாக ரூ. 75,13,000/- விதி மீறுபவர்களால் செலுத்தப்பட்டன. கடந்த இரண்டு மாதங்களில் அழைப்பு மையங்கள் மூலம் நிலுவையில் இருந்த 8,013 குடிபோதை வழக்குகள் தீர்க்கப்பட்டு, ரூ.8,29,10,000 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது.

மேலும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் சம்பந்தப்பட்ட வாகனம் மட்டுமின்றி, வேறு எந்த வாகனங்களாக இருந்தாலும், அசையும் சொத்துக்கள் உட்பட பறிமுதல் செய்ய நீதிமன்றங்களில் ஆணை பிறப்பிக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது. ஏற்கனவே இதுபோன்று குடிபோதையில் வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் அசையும் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு 361 நீதிமன்ற ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE