ஸ்ரீவில்லி.யில் 3 மாதங்களில் 25+ வாகனங்கள் திருட்டு: மக்கள் அச்சம்

By செய்திப்பிரிவு

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கடந்த 3 மாதங்களில் 25-க்கும் மேற்பட்ட பைக்குகள், ஸ்கூட்டர்கள் திருடுபோய் உள்ளன. இந்த வாக னங்கள் சட்டவிரோதச் செயல்களுக்கு பயன்படுத்தப்படுகிறதோ என மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் மாரியம்மன் கோயில் தெரு, மஞ்சித் நகர், கூனங்குளம் வடக்குத் தெரு, பெருமாள்பட்டி, மங்காபுரம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் வீடுகள் முன் நிறுத்தியிருந்த பைக்குகள், ஸ்கூட்டர்களை குறி வைத்து மர்ம நபர்கள் திருடிச் செல்கின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் - திருவண்ணாமலை சாலையில் உள்ள சூலை விநாயகர் கோயில் தெருவில் ஒரே வாரத்தில் 5 பைக்குகள் திருடு போனது. கடந்த சில நாட்களுக்கு முன் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலர் குடியிருப்பில் நிறுத்தியிருந்த பணியாளரின் பைக்கை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இவ்வாறு திருடப்படும் வாகனங்கள் கொலை, கொள்ளை, கடத்தல் உள்ளிட்ட சமூக விரோதச் செயல்களுக்குப் பயன்படுத்தப்படலாம் என்பதால் வாகனங்களைப் பறிகொடுத்தோர் அச்சத்தில் உள்ளனர்.

இதேபோல் கடந்த மாதம் ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜீவ்காந்தி நகரில் சிவராத்திரிக்கு குலதெய்வக் கோயில்களுக்குச் சென்றோரின் வீடுகளைக் குறிவைத்து திருட முயற்சி நடந்தது. அதில் ஆயுதப்படை எஸ்.ஐ வீட்டில் 30 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்கள் திருடு போனது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் புறக்காவல் நிலையங்கள், சோதனைச் சாவடிகள் முறையாகச் செயல்படுவதில்லை. மேலும் இரவு நேர ரோந்து பணியில் தொய்வு ஏற்பட்டதால் சட்ட விரோதச் செயல்கள் அதிகரிக்கின்றன. இதனால் ஸ்ரீவில்லிபுத்தூரில் இரவு நேர ரோந்து செல்லும் போலீஸார் எண்ணிக்கையை அதிகரித்து கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE