வேலூரில் இருந்து தப்பியோடிய 6 சிறுவர்களில் 3 பேர் சென்னையில் கைது

By செய்திப்பிரிவு

வேலூர்: வேலூரில் இருந்து தப்பிய 6 சிறுவர்களில் ஏற்கெனவே ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 3 பேர் சென்னையில் நேற்று கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, தலைமறைவாக உள்ள 2 பேரை தனிப்படை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் காகிதப் பட்டரையில் சமூக பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டில் ‘அரசினர் பாதுகாப்பு இல்லம்’ செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு குற்றவழக்கில் சிக்கி தண்டனை பெற்ற 42 சிறுவர்கள் தங்க வைக்கப் பட்டுள்ளனர். ‘ஏ' பிரிவில் 28 பேரும், ‘பி' பிரிவில் 14 பேரும் தங்கியுள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருந்த சிறுவர்கள் 6 பேர் அங்கு பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களை தாக்கிவிட்டு தப்பியோடினர். இந்த சம்பவம் வேலூரில் சலசலப்பை ஏற்படுத்தியது. தப்பியோடிய சிறுவர்களை தேடும் பணியில் தனிப்படை காவலர்கள் நியமிக்கப்பட்டனர்.

தனிப்படை காவலர்கள் சென்னை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடிவந்தனர். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, சென்னை மணலி பகுதியில் காவல் துறையினர் நேற்று முன்தினம் இரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது,அங்குள்ள ஒரு கடையின் பூட்டை உடைத்து 2 சிறுவர்கள் திருட முயன்றனர். அவர்களை, காவல் துறையினர் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தி யதில், அவர்கள் வேலூர் அரசினர் பாதுகாப்பு இல்லத் தில் இருந்து தப்பித்து வந்த சிறுவர்கள் என்பது தெரியவந்தது.

அதேபோல, மதுரவாயல் பகுதியில் பதுங்கியிருந்த மற்றொரு சிறுவனும் நேற்று கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட 3 பேரும் விசாரணைக்காக காவல் நிலையங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். வேலூரில் இருந்து தப்பி யோடிய 6 பேரில் நேற்று வரை 4 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். அவர்கள் சென்னையில் உள்ள அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்க காவல் துறையினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

அதேபோல, தலைமறைவாக உள்ள மற்ற 2 சிறுவர்களை தேடும் பணியில் தனிப்படை காவலர்கள் தீவிரம் காட்டி வருவதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE